பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள்

பக்தி இலக்கியங்கள்                            

         பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் வேகமாக வளரத் தொடங்கின. பக்தி இயக்கமாகவே வளர்ந்தது. பல்லவர்கள் தொடக்க காலத்தில் சமண சமயத்தை சார்ந்து இருந்தனர். திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். அதன்பின் தமக்கை திலகவதியாரால் சைவத்திற்கு மாறி மன்னன் மகேந்திரவர்மனையும் சைவத்திற்கு மாற்றினார். இதற்கு பிறகு தமிழகத்தில் சைவசமயம் வேகமாக வளரத் தொடங்கியது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆகியோர் தேவாரம் பாடி சைவ சமயத்தை பரப்பினர். மாணிக்கவாசகர் திருவாசகம் பாடினார். இதற்கு முன்பு திருமூலர், காரைக்காலம்மையார் போன்ற அடியார்கள் சைவ நெறியை பரப்பினர். இவர்களைப் போன்ற அடியார்கள் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது. இது போல் பன்னிரு ஆழ்வார்கள் தோன்றி வைணவத்தை வளர்த்தனர். இவர்தம் பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

  • பன்னிரு திருமுறைகள்
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

சிற்றிலக்கியங்கள்

              பிற்கால பாண்டியர் காலத்தில் சிற்றிலக்கியங்களின் செல்வாக்கு மிகுந்தது. சிற்றிலக்கியங்கள் மிகுதியாக வளர்ந்த காலம் நாயக்கர் காலம்.   பெரும் காப்பியங்களில் அவற்றின் உட்பிரிவுகளாக இடம் பெறும் தூது, உலா, போர் வெற்றியை குறிக்கும் செயல்கள் போன்றவை பின்னர் தனி இலக்கியங்களாக உலா,பரணி,தூது, குறவஞ்சி, பள்ளு என உருப்பெற்றன.  சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையை கொண்டு அமைந்தவை.   சிற்றிலக்கியங்கள் ஓரளவு தமிழகத்தின் வரலாற்றை அறிய பயன்படுகின்றன. பள்ளு போன்ற இலக்கியங்கள் அக்கால சமூகநிலையை நமக்கு எடுத்துரைக்கின்றன. சிற்றிலக்கியங்களின் பாடு பொருளாக சிற்றின்பமும் பேரின்பமும் அமைகின்றது. பொதுவாக இறைவன் அரசன் வள்ளல் ஆசான் ஆகியோரின் சிறப்பினை எடுத்துரைத்தலே சிற்றிலக்கியங்களின் பணி எனலாம். தமிழில் சிறப்பாக இடம்பெறும் சிற்றிலக்கியங்கள் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், தூது, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, கோவை, அந்தாதி முதலியன.

தனிப்பாடல்கள்

               தனிப்பாடல்கள் தொகுக்கப்பட்டு தனிப்பாடல் திரட்டு என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

உரையாசிரியர்கள்

              கி.பி. 13, 14 ஆம் நூற்றாண்டு  காலகட்டத்தில் பழமையான இலக்கணங்களுக்கும், இலக்கியங்களுக்கும்  உரையாசிரியர்கள் தோன்றி உரை எழுதினர். இவ்வுரைகள் இல்லையேல் தொல்காப்பியம் போன்ற பழைய இலக்கணங்களையும், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும்   இவ்வளவு நுட்பமாக அறிந்திருக்க இயலாது. மு.வை. அரவிந்தன் தமது உரையாசிரியர்கள் எனும் நூலில் உரையாசிரியர்களின் வரலாற்று முக்கியத்துவத்தை அவர்களால் தமிழுக்கு விளைந்த பயனை பட்டியலிட்டுக் காட்டுகின்றார். உரையாசிரியர்கள் செய்யுளுக்கு பொருள் தருவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக கருதவில்லை. இச்சொல்லினை ஆசிரியர் இங்கு கூற காரணம் யாது? இதனால் கிடைக்கும் பயன், வைப்புமுறையின் விளக்கம், பொருள் நுட்பம், ஒரு சொல் தொடர்பாக இயல்புடைய சொற்களை பிற இலக்கியங்களிலிருந்து காட்டுதல், திறனாய்வு செய்தல் என பல வகைகளில் உரையினை மெருகேற்றி இலக்கியத்திற்கு ஒளியேற்றினர். உரையினை தருக்க நடையிலும், விளக்க நடையிலும் அமைத்தனர்.

இலக்கிய உரையாசிரியர்கள்

  • பேராசிரியர்
  • நச்சுனாக்கினியர்
  • அடியார்க்கு நல்லார்
  • பரிமேலழகர்

வினாக்கள்

கேள்விக்கென்ன பதில்- பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள்