முதல் பருவம் – அலகு-3 பாடக்குறிப்புகள்

அலகு-3 நீதி இலக்கியம்

1.திருக்குறள் 

  • பெயர்க்காரணம்:குறள் வெண்பாக்களால் பாடப்பட்டுள்ளதால்  இப்பெயர் பெற்றது.
  • ஆசிரியர்திருவள்ளுவர்
  • பாவகைகுறள் வெண்பா
  • திருக்குறளின் வேறு பெயர்கள்:
    • திருவள்ளுவம்
    • தமிழ் மறை
    • பொதுமறை

அறன் வலியுறுத்தல்

குறள் 1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.  

விளக்கம்

  • அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அத்தகைய சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறு எதுவும் இல்லை.

குறள் 2

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.  

விளக்கம்

  • நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

குறள் 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

விளக்கம்

  • நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

குறள் 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.  

விளக்கம்

  • ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருப்பதே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை யாவும் வெறும் ஆரவாரமே தவிர வேறொன்றும் இல்லை.

குறள் 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.   

விளக்கம்

  • பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் சிறிதும் இடம் தராமல் வாழ்வதே  அறம் ஆகும் . அவை யாவும் அறவழிக்குப் பொருந்தாதவைகள்.

குறள் 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம்

  • பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

குறள் 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விளக்கம்

  • அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

குறள் 8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.  

விளக்கம்

  • பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

குறள் 9

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.  

விளக்கம்

  • அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

குறள் 10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.  

விளக்கம்

  • பழிச் செயல்கள் செய்யாமல் தன்னைப் பாதுகாத்து, தன் வாழ்நாள் முழுவதும் அறம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும்.

2.நாலடியார் 

  • பெயர்க்காரணம்: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
  • ஆசிரியர்சமண முனிவர்கள்
  • தொகுத்தவர்பதுமனார்
  • பாடல்கள் – 400
  • பொருள்அறம்
  • பா வகைவெண்பா

கல்வி

பாடல்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

விளக்கம்

  • நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையிட்ட (border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல. அவை யாவும் புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில் நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக் கூடியதாகும்.

3.நான்மணிக்கடிகை

  • பெயர்க்காரணம்: நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  அணிகலன் போல் ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள்  இடம்பெறுவதால் நான்மணிக்கடிகை எனும் பெயர் பெற்றது.
  • ஆசிரியர்விளம்பி நாகனார்
  • ஊர்விளம்பி
  • பாடல்கள் -104
  • பாவகைவெண்பா

பாடல்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல் உலகத்து அறம்

விளக்கம்

  • பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத் தருகின்றன
  • நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும் அழகைத் தருகின்றன.
  • பெண்மைக்கு அழகு நாணமுடைமை
  • அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள்  ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.

4.பழமொழி நானூறு

  • பெயர்க்காரணம்: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி  இடம்பெறுவதால் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
  • ஆசிரியர்முன்றுறை அரையனார்
  • பாடல்கள் – 400
  • பாவகைவெண்பா

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,

செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின் நடையானே நட அத்தா! நின் நடை

நின் இன்று அறிகிற்பார் இல்.

விளக்கம்

  • சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம் சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல் நடந்து கொள்வர்
  • இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம் பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள முடியும்
  • ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.

5.இனியவை நாற்பது

  • பெயர்க்காரணம்: இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • ஆசிரியர்பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் – 1 + 40
  • பாவகைவெண்பா

பாடல்

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே

கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே

தட மென் பணை தோள் தளிர் இயலாரை

விடம் என்று உணர்தல் இனிது.

விளக்கம்

  • இளவயதிலேயே முதுமை தருகின்ற மனப்பக்குவம் பெற்றிருப்பது இனிது.  
  • சுற்றத்தார்கள் அன்புமொழி கூறுபவராக அமைவது இனிது.
  • மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட பிற மகளிர் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிந்து விட்டு விலகிவிடுதல் இனிது
  • என வாழ்க்கைக்கு இனிமை தரும் செய்திகளை இப்பாடல் விவரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!