முதல் பருவம் அலகு 5 வினா விடை

குறுவினாக்கள் 

  • தேவாரம் குறிப்பு வரைக.
    • பன்னிரு திருமுறைகள்: பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளே தேவாரம் என அழைக்கப்படுகின்றன.
    • பாடியவர்கள்: தேவார மூவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரால் இவை பாடப்பட்டன. 
      • திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளைப் பாடினார்.
      • திருநாவுக்கரசர் அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடினார்.
      • சுந்தரர் ஏழாவது திருமுறையைப் பாடினார்.  
         
  • தேவார மூவர் யார்?
    • திருஞானசம்பந்தர்
    • திருநாவுக்கரசர் (அப்பர்)
    • சுந்தரர்
  • திருநாவுக்கரசர் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்
  • “நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • நாமார்க்கும் குடியல்லோம்…..” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
  • மாணிக்கவாசகர் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
    • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால்)
  • கோகழி ஆண்ட குறுமனிதன் யார்?
    • கோகழி ஆண்ட குறுமனிதன் சிவபெருமான் ஆவார்.
  • வேகம் கெடுத்தாண்ட வேந்தன் யார்?
    • வேகம் கெடுத்தாண்ட வேந்தன் சிவபெருமான் ஆவார்.
  • முதல் ஆழ்வார்கள் மூவரின் பெயரினை எழுதுக.
    • பொய்கையாழ்வார்
    • பூதத்தாழ்வார்
    • பேயாழ்வார்
  • பொய்கையாழ்வார் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “வையந் தகளியா….”எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
  • பூதத்தாழ்வார் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “அன்பே தகளியா….” எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
  • பேயாழ்வார் குறிப்பு வரைக.
    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100
  • “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “திருக்கண்டேன் பொன்மேனி….” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் பேயாழ்வார் ஆவார்.
  • அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் யார்?
    • அன்பால் ஞான விளக்கினை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார்.
  • உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் யார்? யாருக்காக ஏற்றினார்?
    • உலகினை விளக்காக கொண்டு விளக்கேற்றியவர் பொய்கையாழ்வார் ஆவார்.
    • நாராயணனுக்காக ஏற்றினார்.
  • ஆண்டாள் குறித்து எழுதுக.
    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173
  • “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    • “மார்கழி திங்கள்…” – எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் ஆண்டாள்.
  • மார்கழி மாத நோன்பு குறித்து எழுதுக.
    • இறைவனை, குறிப்பாக கண்ணனை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் ஆண்டாள் நாச்சியார் இந்த நோன்பை இருந்தார். 
    • அதிகாலை எழுந்து நீராடி, வீட்டில் கோலமிட்டு, திருப்பாவை பாசுரங்களைப் பாடி, பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவர். 
  • திருமந்திரம் குறித்து எழுதுக.
    • இது 3000 பாடல்களைக் கொண்ட ஒரு மெய்யியல் நூல்.
    • ‘அன்பே சிவம்’ என்ற தத்துவத்தை வலியுறுத்துகிறது.
    • ‘சிவமே அன்பு’ என்று கூறுகிறது.
    • இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது.
  • அன்பும் சிவமும் இரண்டென்பார் யார்?
    • அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்.
  • பட்டினத்தார் குறிப்பு வரைக.
    • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.
  • பட்டினத்தாரின் இயற்பெயரினை எழுதுக.
    • இயற்பெயர்: திருவெண்காடர்.
  • கடுவெளி சித்தர் குறித்து எழுதுக.
    • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.
  • நீர்மேல் குமிழி போன்றது எது?
    • நீர்மேல் குமிழி போன்றது நம் உடல்.
  • நால்வகைப் பகைகள் யாவை?
    • காமம்
    • குரோதம்
    • மதம்
    • மாற்சரியம்
  • அட்டசித்திகளைப்/ எண்வகை சித்திகளைப் பட்டியலிடுக.
    • அணிமா
    • மகிமா
    • இலகிமா
    • கரிமா
    • பிராத்தி
    • பிராகாமியம்
    • ஈசத்துவம்
    • வசித்துவம்
  •  எவையெல்லாம் பாவச்செயல்கள் என கடுவெளி சித்தர் குறிப்பிடுகிறார?
    • உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே.
    • இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே.
    • பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே.
    • கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.
    • இவையெல்லாம் பாவச்செயல்கள் என்கிறார் கடுவெளி சித்தர்.
  • அட்டாங்கயோகம்  – பட்டியலிடுக.
    • இயமம்
    • நியமம்
    • ஆசனம்
    • பிராணாயாமம்
    • பிரத்தியாகாரம்
    • தாரணை
    • தியானம்
    • சமாதி
  • வீடுபேறு அளிப்பவர் யார்?
    • வீடுபேறு அளிப்பவர் சிவபெருமான் ஆவார்.
  • இராவண காவியம் குறித்து எழுதுக.
    • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை.
    • இக்காப்பியம் தமிழக காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது.
    • இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
  • புலவர் குழந்தை குறிப்பு வரைக.
    • 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
    • இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார்.
    • ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • இராவண காவியத்தில் மைந்துள்ள காண்டங்களைப் பட்டியலிடுக.
    • தமிழக காண்டம்
    • இலங்கைக் காண்டம்
    • விந்தக் காண்டம்
    • பழிபுரி காண்டம்
    • போர்க் காண்டம் 
  • தமிழை மக்கள் வளர்த்த விதத்தினை எழுதுக.
    • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
  • இருகண் பார்வை எது?
    • இருகண் பார்வை தமிழ்மொழி ஆகும்.
  • தாய்மொழிப்படலம் வழி படிப்பின் சிறப்பினை எழுதுக.
    • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை.
    • கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை.
    • செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை.
    • வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை.
    • நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை.
    • யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.

நெடுவினாக்கள்

  • திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களின் பொருளினை விளக்குக. (அல்லது) ‘நாமார்க்கும் குடியல்லோம்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

திருநாவுக்கரசர்

    • இயற்பெயர்: மருள் நீக்கியார்
    • பெற்றோர் : புகழனார், மாதினியார்
    • அக்கா : திலகவதியார்
    • பிறந்த ஊர்: திருவாமூர்
    • இவர் பாடியவை: 4,5,6 திருமுறைகள்
    • சிறப்பு பெயர்கள்:
      • திருநாவுக்கரசர்,வாகீசர்,அப்பர்,ஆளுடைய அரசு,தாண்டக வேந்தர்,தருமசேனர்
    • சமண சமயத்திலிருந்து  சைவ சமயத்திற்கு மாற்றியவர் -தமக்கை திலகவதியார்

பாடல் விளக்கம்

    • மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை. என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம்.
    • வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம். யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
  • மாணிக்கவாசகர் பாடலின் பொருளினை விளக்குக.(அல்லது) ‘நமசிவாய வாழ்க…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) திருவாசகப் பாடலின் பொருளினை எழுதுக.

மாணிக்கவாசகர்

    • இயற்பெயர் தெரியவில்லை
    • பெற்றோர் : சம்புபாதசாரியார் – சிவஞானவதி
    • இவர் பாடியவை: 8 திருமுறை

சிறப்பு பெயர்கள்

    • அருள் வாசகர்
    • மணிவாசகர்
    • அழுது அடியடைந்த அன்பர்
    • தென்னவன் பிரமராயர்
    • மாணிக்கவாசகர் (இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போல் உள்ளதால் )

பாடல் விளக்கம்

    • திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
    • மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெல்க; பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் வெல்க; தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் வெல்க; கை குவித்து வணங்குவோர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெல்க; கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்குவோரை வாழ்வில் உயரச் செய்கின்ற சிறப்புடையவனது திருவடி வெல்க என்று இறைவனின் திருவடிகளை வாழ்த்துகின்றார் மாணிக்கவாசகர்.
  • முதல் ஆழ்வார்கள் மூவரின் பாடல்களின் பொருளினை எழுதுக.

முதலாழ்வார் மூவர்

    • வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
  • பொய்கை ஆழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘வையந் தகளியா…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பொய்கையாழ்வார்

    • பிறந்த ஊர் : காஞ்சிபுரம்- பொய்கையில் அவதரித்தவர்,
    • காலம் : 7ம்நூற்றாண்டு
    • எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக அமைத்து, உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்து, உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தி, சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன். துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
  • பூதத்தாழ்வார் பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘அன்பே தகளியா…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பூதத்தாழ்வார்

    • பிறந்த ஊர் : மகாபலிபுரம்
    • காலம் :  7ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! உம்மால் ஞானத் தமிழை அறிந்த நான் அன்பையே அகல் விளக்காக அமைத்து, உன் மீது கொண்ட ஆர்வத்தை நெய்யாக வார்த்து, என் சிந்தையைத் திரியாக அமைத்து ஞானத்தால் சுடர் ஏற்றுகின்றேன். உலகத்தின் இருளில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
  • பேயாழ்வார்  பாடலின் பொருளினை எழுதுக.(அல்லது) ‘திருக்கண்டேன் பொன்மேனி…’ எனத்தொடங்கும்  பாடலின் பொருளினை எழுதுக.

பேயாழ்வார்

    • பிறந்த ஊர் :  மயிலாப்பூர்
    • காலம்: ஏழாம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
    • பாடல்கள் : 100

பாடல் விளக்கம்

    • “பெருமானே! நான் இன்று கடலைப்போல கருத்த நிறம் கொண்ட உம் திருமுகத்தைக் கண்டேன். உம்முடைய திருமேனியைக் கண்டேன். உம் திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். உம்முடைய கையில் எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன். அதனால் அருள் பெற்றேன்” என்று மனமுருகிப் பாடுகின்றார்.
  • திருப்பாவை முதல் பாடலின் பொருளினை எழுதுக. (அல்லது) பாவை நோன்பு மேற்கொள்ளும் விதத்தினை திருப்பாவை வழி விளக்குக. (அல்லது) ‘மார்கழி திங்கள்…’ எனத்தொடங்கும் பாடலின் பொருளினை எழுதுக.

ஆண்டாள்

    • பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
    • வளர்ப்புத்தந்தை : பெரியாழ்வார்
    • காலம் : 9ம் நூற்றாண்டு
    • எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
    • பாடிய பாடல் : 173

திருப்பாவை – முதல் பாடல்

பாடல் விளக்கம்

    • அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
  • திருமூலர் பாடலின் பொருளினை எழுதுக.

திருமந்திரம் – திருமூலர்

    • திருமூலர் 63 நாயன்மார்களுள்  ஒருவரும், பதினெண் சித்தர்களுள்  ஒருவரும் ஆவார். எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். இவர் இயற்றிய திருமந்திரத்தைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.  இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  ‘மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 
    • வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

அன்புடைமை – பாடல் விளக்கம்

    • அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வு, சிவன் என்று அழைக்கப்படுகின்ற இறைவன் இரண்டும் வேறு வேறு என்று கூறுபவர்கள் உண்மை ஞானம் அறியாதவர்கள். ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படுகின்ற எதிர்ப்பார்ப்பில்லாத தூய்மையான அன்புதான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்புதான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்தபின், அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பு சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
    • பொன்னைக் காட்டிலும் ஒளி வீசுகின்ற புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான். வானில் மின்னுகின்ற பிறைச் சந்திரனைத் தன் சடை முடியில் சூடியிருப்பவன். சுடுகாட்டில் எஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடி போல திருமேனி எங்கும் பூசிக் கொள்பவன். அநதச் சாம்பலின் பொடி மீது திருநடனம் ஆடுகின்றவன். அப்படிப்பட்ட இறைவனிடம் நான் கொண்டுள்ள அன்பும், இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பும் இரண்டறக் கலந்துள்ளது.
    • உள்ளம் உருக இறைவனைப் போற்றி வழிபடுங்கள். உடலை விட்டு உயிர் பிரியும் முன்பே அனைத்து உயிர்களின் மீதும் அன்பை செலுத்தி, அதன் மூலம் இறைவனைத் தேடுங்கள். அப்படிச் செய்தால், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் தனது அளவில்லாத பெருங்கருணையைக் கொடுத்து இறைவன் நம்மோடு  இருப்பார்.
    • தானே சுயமாகத் தோன்றியவன். தம்மை அன்போடு வணங்கி வாழ்ந்த உயிர்கள் இறந்து விண்ணுலகம் செல்லும் காலம் வரை அவர்களோடு வழித்துணையாக வருபவன். கொன்றை மலர்களைத் தன் இடப்பாகத்தில் மாலையாக அணிந்திருப்பவன். அப்படிப்பட்ட சிவபெருமான் பேரன்பின் உருவமாக என்னுடன் கலந்து நிற்கின்றான்.
    • கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை நான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையைக் கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாகத் தன் மேல் போர்த்திக் கொண்டனின் அழகிய கழல்களை நான் கண்டு கொண்டேன். தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருடிகளை நான் கண்டு கொண்டேன். இறைவன் மீது நான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பு உருவமாக நிற்கின்ற சிவனின் திருமேனியை நான் கண்டு கொண்டேன்.
  • பட்டினத்தார் – திருவிடைமருதூர் – பாடல்களின் பொருளினை விளக்குக.

பட்டினத்தார்

    • இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர். இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர். சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.

திருவிடைமருதூர் – பாடல் விளக்கம்

    • உள்ளத்தில் ஒழுக்கம் இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப் பெறுவான்.
    • வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும் பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும் சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும் துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.
  • கடுவெளிசித்தர் – “பாவஞ்செய் யாதிரு மனமே…” பாடல்களின் பொருளினை எழுதுக.

கடுவெளிச்சித்தர்

    • கடு என்பதற்கு பெரிய என்று பொருள். கடுவெளி என்பது பரந்த வெளி. பரந்த வெளியாகிய மனதை நோக்கி, அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. ஆகையால் கடுவெளிச்சித்தர் என்று அழைக்கப்படுகின்றார்.

பாடல் விளக்கம்

    • என் மனமே! நீ ஒருவருக்குமே எந்த ஒரு சிறு பாவமும் செய்யாதிருப்பாயாக. ஏனெனில் நீ பாவம் செய்தால் இயமன் கோபம் அடைவான். அவன் அவ்வாறு கோபப்பட்டு உடனே உன் உயிரைப் பறித்துக் கொண்டு சென்று விடுவான். அதனா சிறிதும் பாவம் செய்யாது இருப்பாயாக.
    • மனமே! மற்றவர் நமக்குத் தீமை செய்தால் அதற்காக நாம் அவர் வாழ்வே அழியும்படியாகச் சாபம் கொடுக்கலாமா? நிச்சயமாகக் கூடாது. விதி (வாழ்) என்ற ஒன்றை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா?முடியாது. நம்மிடம் ஒருவர் கோபம் கொள்வதால் பதிலுக்கு நாமும் அவரிடம் கோபம் கொள்ளலாமா? கூடாது. பிறர் பொருள்மேல் ஆசை உண்டாக்கும் எண்ணத்தை பிறரிடம் நாம் வளர்க்கலாமா? கூடாது.

நேசிப்புத்தன்மை

    • மனமே! சொல்லுதற்கு அரிய அதாவது, சொல்லும்போதே பாவம் உண்டாக்கக் கூடிய தீய செயல்களான சூது, பொய், மோசம் இவற்றைச் செய்யாமல் விட்டு ஒழிக்கவேண்டும். சூது. பொய், மோசம் இம்மூன்று பாவச் செயல்களையும் ஒருவர் செய்தால் அவருடைய உறவினர் அவரை விட்டு நீங்கி விடுவர். இறுதியில் அவருக்கு அழிவுதான் உண்டாகும்.

 

    • இறைவனிடம் நல்ல புத்தியும், நல்ல நம்பிக்கையும் கொள்ள வேண்டும். மனிதர்களிடம் அன்பு செலுத்தவேண்டும். மொத்தத்தில் நல்ல புத்தி. நல்ல நம்பிக்கை, நல்ல அன்பு இவற்றைக் கைக்கொண்டு இறைவனையும். மனிதர்களையும் நேசிக்க வேண்டும்.
    • மனமே! இந்த உடலானது நீர்மேல் தோன்றி மறையும் குமிழிபோன்று நிலையற்றது. சில நாள்களில் இவ்வுடலைவிட்டு உயிர் பிரிந்து விடும். இந்த மாயத்தை நீ அறிந்து கொள்வாயாக. இவ்வுலக ஆசைகளில் நீ பற்றுக் கொள்ளாது இருப்பாயாக, அங்ஙனம் நீ பற்றுக் கொள்ளாதிருப்பதற்கு யோகம் செய்வதே நல்லதோர் தந்திரம் ஆகும்.

இறைநிலை அடைதல்

    • தாயின் வயிற்றில் பத்து மாதம் தங்கி ஒருவன் இவ்வுலகில் பிறந்தான். பிறந்த பின்பு இறைவனைத் தியானிக்காமல், தேவையற்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டு. பிறந்தது யோகம் செய்து இறைநிலையை அடைவதற்காகத்தான் என்னும் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே அவன் வீணே இறந்துவிட்டான். மனமே! நீ அத்தகைய எளிய மனிதன்போல் இருக்காமே. யோகப்பயிற்சி செய்து இறைநிலையை அடைவாயாக.

(நந்தவனம் தாயின் கருப்பை. குயவன் இறைவன்.நாலாறு

மாதங்கள் = 4+6= 10 மாதங்கள். தாய் வயிற்றில் கருவாக இருக்கும் கால அளவு)

எமப்பயம்

    • மனமே!நீ யாரையும் பழித்துப் பேசாதே !நீ தேடி வைக்கின்ற சொத்தில் சிறுபகுதி கூட நிலையாக உன்னிடம் நிற்காது. தீயவற்றைப் பார்ப்பதும், தீயவற்றைக் கேட்பதும், தீயவற்றைச் சொல்வதும் ஆகிய ஏடணை மூன்றும் பொல்லாதவை. எனவே, அவற்றைச் செய்யாதே. சிவபெருமான் மேல்பக்தி வைத்தால் இயமபயம் உன்னை நெருங்காது.

இறைவனை வணங்குதல்

    • மனமே !நீ எப்பொழுதும் நல்ல வழியையே நாடவேண்டும் . எப்பொழுதும், எந்த நாளும் இறைவனை ஆர்வமுடன் தேடவேண்டும். மனம், மொழி, மெய்யால் தூயவர்களாய் விளங்கும் நல்லவர்களுடன் விரும்பிச் சேரவேண்டும். யாவற்றையும் மனிதர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகிய இறைவனை நீ என்றென்றும் வணங்குவாயாக.

அறங்கள்

    • மனமே! நல்லவர்களை ஒதுக்காதே. தலைமையான அறங்கள் பனிரெண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று கூட செய்யாமல் விட்டுவிடாதே. பொல்லாங்கு எதுவும் சொல்லதே. ஒருவரைப் பற்றி, மற்றவரிடம் அவதூறாகப் பேசும் செயலைச் (கோள் மூட்டுதல்) செய்யாதே.

(அறம் நால் எட்டு 4 x 8 -32 அறங்கள்)

யோகம் செய்தல்

    • மனமே! வேதம் கூறும் நல்வழியில் நிற்பாயாக. நல்லவர்கள் எவ்வழிகளை விரும்பி வாழ்வில் செய்கிறார்களோ, நீயும் அவர்கள் செல்லும் வழியிலேயே செல்வாயாக, அனைவருக்கும் நல்லனவற்றையே சொல்வாயாக கோபம் என்பது அனைத்துப் பாவங்களுக்கும் காரணமானது. அதனை, யோகம் செய்து நீக்குவாயாக.

ஆர்வத்துடன் இருத்தல்

    • மனமே! நீ பிச்சையென்று எந்த ஒரு பொருளையும் எவரிடமும் பெறாதே. அழகான பெண்மேல் ஆசை கொண்டு அழியாதே. ஆசை உன்னை ஆட்டும்படி அதற்கு அடிமையாகி விடாதே. ஆனால் சிவபெருமானை எவ்வாறேனும் காணவேண்டும் என்னும் ஆசையில் இருந்து மீண்டுவிடாதே. தொடர்ந்து அவனைக் காணவேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருப்பாயாக,

மெய்ஞ்ஞானம்

    • மனமே! இறைவனைக் காணவேண்டும் என்பதுதான் மெய்ஞ்ஞானப் பாதை ஆகும். நீ அந்தப் பாதையில் செல்வாயாக, வேட்ட வெளியாகத் திகழும் இறைவனைக் கண்டறிவாயாக. இறைநம்பிக்கை அற்றோர் கூறும் அஞ்ஞானம் உன்னிடத்தில் இருந்தால் அதனை உடனே தோண்டி எறிவாயாக உன்னை நாடியவர்களுக்கு நாடியவர்களுக்கு எல்லாம் இறைவனுடனான உன் பேரின்ப அனுபவத்தை அவர்கள் மனம் ஏற்கும்படிக் கூறுவாயாக

(மெய்ஞ்ஞானம் இறைவனை நாடும் அறிவு. அஞ்ஞானம் இறைவன் இருப்பதை மறுக்கும் அறிவு)

நல்ல புத்தி

    • மனமே! உண்மைக் குருவின் சொல்லை என்றுமே மீறி நடக்காதே. நல்ல நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதைக் குறைத்துக் கொள்ளாதே. அந்த நற்செயலைப் பெருக்கிக் கொள்வாயாக. தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் காட்டிக் கொள்ளாதே. இறைவன் கொடுத்த நல்ல புத்தியைப் பொய்யான வழியில் செலுத்தி வாழ்வை வீணாக்கிக் கொள்ளாதே.

வீடுபேறு

    • மனமே! நம்முடன் இறுதி வரை வருவது ஒன்றுமில்லை. புழு போன்ற துர்நாற்றம் வீசும் உடலை எடுத்து இவ்வுலகில் நடமாடுவது தொல்லை தேடுவதற்கு அரிய வீடுபேற்றினை அடைவதே எமது எல்லை. ஆந்த அரிய வழியைத் தேடித் தெளிவோர் இவ்வுலகில் எவருமில்லை.

முக்தி

    • மனமே ! இந்த உடல். ஐம்புலன்களால் சூழ்ந்த காடாகும். ஐம்புலன்களால் உமாதேவியாரின் கணவராகிய சிவபெருமானை நீ நாடு. அவரை எங்ஙனமேனும் வருந்தி தேடு. அந்த மூலப்பொருளை அடைந்துவிட்டால் அதுவே முத்தியடையும் வீடாகும்.

நான்கு பகை

    • மனமே!உன் உள்ளேயே காமம். குரோதம். மதம். மாற்சரியம் என்னும் நால்வகைத் தீய குணங்களை ஒருவரும் அசைக்க முடியாதபடி கோட்டையாக அமைத்துள்ளாய். ஆனால் இவ்வுடலானது நல்ல நாடு போன்றதாகும். இந்த நான்கு பகைகளையும் ஓட ஓட விரட்டினால் உடல் என்னும் நாடு நம் வசப்படும். அதற்கு மனமே! நீ முதலில் என் வசப்பட வேண்டும்.
    • கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐந்து புலன்களும் கள்ளப் புலன்கள் ஆகும். ஏனெனில், மனிதனை அறிவுநிலை அடையவிடாமல் இவைதான் தடுக்கின்றன. இவற்றை மனதால் மட்டுமே வசப்படுத்த முடியும். மனதை, தியானம் மற்றும் யோகப் பயிற்சியினால் மட்டுமே வசப்படுத்த முடியும். இவ்வழியில் அதனை வசப்படுத்தி, இந்த ஐம்புலன்கள் என்னும் காட்டை கனலில் இட்டால் பேரின்பமாகிய வீடுபேறு கிடைக்கும்.

காசியும் கங்கையும்

    • மனமே! எண்ணற்ற பாவங்களை வாழ்நாளில் செய்துவிட்டு அதனைப் போக்கிக் கொள்ள காசிக்குச் சென்றால் அந்தப் பாவங்கள் தொலையுமோ? தொலையாது. கங்கையிலே நீராடினாலாவது முத்தி விடைக்குமா என்றால் கிடைக்காது. மற்றவரிடம் நம் பாவங்களை எடுத்துச் சொல்லிப் புலம்புவதால் பாவங்கள் தீருமா என்றால் தீரா. நான் உயர்ந்தவன். நீ தாழ்ந்தவன் என்றும் வேறுபாடு. மேற்கண்ட செயல்களை எல்லாம் நாம் செய்வதால் போகுமோ? போகாது. அவரவர் செய்த வினைகளின் பலன்களை அவரவரே அனுபவிக்க வேண்டும். வினைகளினின்றும் விடுபடுதல் அரிது.

பொய்வேடம்

    • மனமே! இவ்வுலகில் பலரும் பொய் வேடமிட்டுத் திரிகின்றனர். அதுமட்டும் அல்லாமல், ஒருவரின் புறத்தோற்றத்தைக் கண்டு மட்டுமே இவ்வுலகம் அவரைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பொய்க்கோலம் ஒருவன் இறந்து போகும் காலத்தில்தான் அழிகிறது.
    • ஒருவன் மரண மடையும் காலத்தில்தான் செய்த பாவங்களை எண்ணி வேதனைப் படும் நிலை வாய்க்கிறது. இதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. இவையெல்லாம் சுத்த மாயை, இதுபோன்று பொய்வேடமிட்டுத் திரிவதனால் உலகில் யார்க்கு என்ன நன்மை?ஒருவருக்கும் இல்லை. எனவே மனமே! நீ பாவம் செய்யாதிரு.

முடிவில்லாதவன்

    • மனமே! இறைவன் சிறிதும் குற்றமற்றவன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவன். அவனையே கதி என்று நினைப்பவர்க்கு எந்த நாளும் தாழ்வில்லை. இறைவன் முடிவில்லாதவன். எங்கும் ஆனந்தமாய் நிரம்பியவன்

அட்டசித்தி

    • மனமே!இவ்வுலகிலேயே உயர்ந்தது பக்திதான். அதைத் தவிர வேறு எதுவுமே உயர்ந்ததல்ல. இறைவன் மேல் பக்தன் கொள்ளும் ஆழ்ந்த அன்பே இறுதியில் வீடுபேற்றை அளிக்கும் சிவபெருமான் மேல் தொடர்ந்து பக்தி செலுத்தி வந்தால், அட்ட சித்திகளும் விரைவிலேயே கைகூடும். (அட்ட சித்தி- எண்வகை சித்திகள். அணிமா, மகிமா, இலகிமா கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்)

தியானம்

    • மனமே!அன்பு என்னும் நல்ல மலரினைத் தூவி,பரமானந்தமயமாய் விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்குவாயாக. உடல், ஆவி இவ்விரண்டையும் முத்தியடையச் செய்ய இவ்வுலகிலேயே தியானத்தின் மூலம் பழகுவாயாக. அவ்வாறு செய்வதற்கு மனமே! நீ உன்னைப் பழக்கிக் கொள்வாயாக.

வீடுபேறு

    • மனமே! இம்மண்ணுலகில் பிறந்த பிறப்பை ஒழிக்கும் வழியை அறிந்து கொண்டு, வீடுபேறு அடையும் வழியைக் கண்டு கொண்டு, எவ்விதக் மனவெறுப்பும் இல்லாமல், எல்லாம் வல்ல கோபமும் இல்லாமல், மன சிவபெருமானுக்குத் தொண்டு செய்தால் வீடுபேறு அடையலாம்.

கொண்டாட்டம்

    • மனமே! இந்த உடலில் ஆன்மா புகுந்து, உடலை அதன் விருப்பப்படி ஆட்டிப் படைக்கிறது. இந்த உடலில் இருந்து ஆன்மா(உயிர்) நீங்கிவிட்டால்?. இவ்வுடல் வாட்டமடைந்து விடுகிறது. வீடுபேறு அடையவதிலேயே நீ பெருவிருப்பம் கொண்டு இருந்தால் உனக்கு எப்பொழுதும் கொண்டாட்டம்தான்.

ஆனந்தவெள்ளம்

    • மனமே!வாசி என்னும் மூச்சுப் பயிற்சியின் மூலம் எண்வகை சித்திகளையும் அறிந்து கொண்டு, உன்னுள் மறைந்திருக்கும் அனைத்து இரகசியங்களையும் தெரிந்து கொண்டு. வெட்டவெளியாய்த் திகழும் இறைவனைச் சார்ந்து, ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வேண்டும். மனமே! இதனை நீ உணர்ந்து கொள்வாயாக.

இறைவனை எண்ணுதல்

    • மனமே! இவ்வுலகம் முள்போன்று துன்பம் நிறைந்தது. எனவே இவ்வுலக வாழ்விலே பேராசை வைக்காமல் அதை உதறித் தள்ளுவாயாக. தியான நிலையில் அமர்ந்து, அதன் மூலம் கிடைக்கும் பேரின்ப வெள்ளத்தை அனுபவிப்பாயாக. அதனையே தொடர்ந்து உண்பாயாக அதாவது, எப்பொழுதும் யோகநிலையிலேயே அமர்ந்து இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பாயாக.

தீயவர்களுடன் சேராமை

    • மனமே! வேதம் கூறும் செய்திகளைக் கேட்காதே. அவை இறைவனை அடைய உதவமாட்டா. வேதநூல் பயின்று, அதன்படி தாங்களும் வாழ்வில் கடைப்பிடிக்காதவர்களாகிய குருமார்களின் அறிவுரையையும் கேட்காதே. கண்ணில் மைதீட்டி, வாழ்வைப் பாழாக்கும் சில தீய பெண்களைச் சேராதே. தவறான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் தீயவர்களுடன் விருப்பப்பட்டுச் சேராதே.

பாவச்செயல்கள்

    • மனமே! உன்னைத் திட்டியவர் யாராக இருந்தாலும், அவரை நீயும் திருப்பி திட்டாதே. இவ்வுலக மக்கள் அனைவரும் பொய் சொன்னாலும் நீ மட்டும் பொய் கூறாதே. பிறர் திட்டும்படி வெறுக்கும்படியான, கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதே. கல்லை, பறவைகள்மீது எறியாதே. இவையெல்லாம் பாவச் செயல்கள் ஒருவர் இவற்றைச் செய்யக் கூடாது.

சன்மார்க்கம்

    • மனமே! சிவபெருமானைத் தவிர வேறு தெய்வம் எதனையும் வேண்டாதே. மற்றவர்களுக்குள் தீமையை உண்டாக்கும் சண்டையைத் தூண்டிவிடாதே. தவநிலையில் இருந்து விலகாதே. சன்மார்க்கம் கற்பிக்கும் நூலைத் தவிர. மற்ற நூல்களை விரும்பாதே .

ஆணவம்

    • மனமே ! பாம்பினைக் கையில் பிடித்து, அவற்றுக்கு எவ்விதத தீமையும் செய்யாதே. கற்புநெறி தவறாத பெண்களைப் பழிக்காதே. வேம்புபோலக் கசக்கும் செயல்களையும், பேச்சுக்களையும் உலகில் பரப்பாதே நான்தான் பெரியன் என்று ஆணவம் கொண்டு வீறாப்புடன் இருக்காதே

தீயசெயல்

    • மனமே! நீ பூசை முதலிய சடங்குகளை விரும்பாதே. மற்றவர்கள் உன்னைப் போலியாகப் புகழவேண்டும் என எண்ணாதே, பிறர் பழிக்கும் வாழ்வை நினையாதே. பிறர் தாழும்படியான தீயசெயல் எதுவும் செய்யாதே.

மோசமான வழி

    • மனமே! கஞ்சா என்னும் போதைப் பொருளையும், பீடி போன்றவற்றைப் யுகைக்காதே. இனிய மயக்கம் தரும் என மகிழ்ந்து கள்ளைக் குடிக்காதே. ய்யந்து இறக்காதே. புத்தியை மழுங்க வைக்கும் இறை உண்மையை மறுக்கும் நூல்களைப் படிக்காதே. அவ்வழியில் செல்லாதே.

வாய்மை

    • மனமே! நீ பக்தியென்னும் உருவாகவே மாறி, சொந்த பந்தங்களில் இருந்து விலகி, வாய்மையையே எப்பொழுதும் பேசி, சமயங்களில் இருந்து நீங்கி, இறைவனை யோக சாதனைகள் மூலம் உன்வசமாக்கிக் கொள்வாயாக.

அட்டாங்க யோகம்

    • மனமே! எண்ணற்றவையாய் இருக்கும் இன்பம் எல்லாம் ஒரு நாளில் நம்மைவிட்டுச் சென்றுவிடும் சிற்றின்பங்கள்தான் என எண்ணி, ‘சீஇவை இழிந்தவை என அவற்றை விலக்கி, உண்மையான இறைவடிவை நாட வேண்டும். இவ்வுலகில் ஈடு இணையற்றதாக விளங்கும் எட்டுவித யோகமுறைகளை நன்கு பயின்று. அதுதான் உண்மை இன்பம் என்பதை மனமே! நீ அறிந்து கொள்வாயாக.

(அட்டாங்கயோகம் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி)

போதித்தல்

    • மனமே! நல்ல நீதிகள் எந்தெந்த நூல்களில் உள்ளனவோ அவை அனைத்தையும் எடுத்து, மக்களுக்குப் போதிக்கவேண்டும். பல்வேறு சாதிகளும், அவை மக்களைப் படுத்தும் பாடுகளும் ஒவ்வாது என்பதை அறிந்து உள்ளுக்குள்ளே குடியிருக்கும் இறைவனை மனமே !நீ வணங்குவாயாக.

பகையை வளர்க்காதே

    • மனமே!இறைவனை உண்மையான முறையில் நாடாமல் தவம் மறைந்து தீயவை செய்வதன் பொருட்டு போலிச் சாமியார் வேடம் புனையாதே. பாவங்கள் பலவற்றையும் செய்துவிட்டு, கங்கையிலே போய் நீராடுவதால் அப்பாவங்கள் போகும் என எண்ணாதே. மற்றவர்களுடைய பொருளை அபகரிக்க எண்ணாதே. நட்பாக இருக்கும்போது முகம் மலரப் பேசி. பிரிந்தபோது கோள்மூட்டிப் பகையை வளர்க்காதே.

வீடுபேறு அளிப்பவன்

    • மனமே! எங்கும் அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவன் இறைவன். அவன் அன்பர்களின் இதயத்தில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பவன். அவன் அடியவர்க்கு அடியவன். தன்னை விரும்பி வணங்கும் அடியவர்களுக்கு வீடுபேறு அளிப்பவன்.
  • இராவண காவியம் – தாய்மொழிப் படலம் வழி தமிழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க. (அல்லது) தாய்மொழிப்படலம் – கருத்துக்களைத் தொகுத்துரைக்க. (அல்லது) பண்டைய தமிழர் தமிழ்மொழியைப் போற்றி வளர்த்த விதத்தினை தய்மொழிப்படலம் வழி விளக்குக.

இராவண காவியம்

      • இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் – என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம், கலப்பு மணம், சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.

தாய்மொழிப்படலம் – பாடல் விளக்கம்

    • தமிழை மக்கள் கற்றவிதம்
      • இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு. அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல், இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
    • தமிழ் ஒன்றே எனது உரிமை
      • அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும் மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
    • நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்
      • அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.

நாடெல்லாம் புலவர் கூட்டம்

நகரெல்லாம் பள்ளி ஈட்டம்

வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்

விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

    • படிப்பின் சிறப்பு
      • தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு, கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
    • தமிழை மக்கள் வளர்த்தல்
      • தமிழைப் பாடுபவர்களுக்கு, தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடு, நகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
  •  
  •  

முதல் பருவம் அலகு-4 வினா விடை

குறுவினாக்கள்

  • காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • காப்பியம் இரண்டு வகைப்படும். அவை, 1.பெருங்காப்பியம், 2. சிறுகாப்பியம்
  • ஐம்பெரும்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
    • சீவகசிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி
  • இரட்டைக் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
    • சிலப்பதிகாரம்
    • மணிமேகலை
  • சிலப்பதிகாரம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர் : இளங்கோவடிகள்
    • சமயம் – சமணம்
    • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
    • வேறு பெயர்கள்: குடிமக்கள் காப்பியம்,
      முத்தமிழ் காப்பியம்,
      உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகள் யாவை?
    • அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
    • ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
    • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
  • சிலப்பதிகாரம் நூல் அமைப்பு குறித்து எழுதுக.
    • நூல் அமைப்பு : 
      புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.
  • சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? அவை யாவை?
    • சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது.
    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களைக் கொண்டது.
  • சிலப்பதிகாரத்தைப் பாரதியார் எங்ஙனம் புகழ்ந்துள்ளார்?
    • ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்’ எனப் பாராட்டுகிறார்.
  • கோப்பெருந்தேவி கண்ட தீக்கனவு குறித்து எழுதுக. 
    • வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழுதல்
    • அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலித்தல்
    • எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுறுதல்
    • சூரியனை இருள் விழுங்குதல்
    • இரவு நேரத்தில் வானவில் தோன்றுதல்
  • வாயிற்காவலன் கண்ணகி பற்றி கூறியவற்றை எழுதுக.
    • கொற்றவை அல்லள்!
    • பிடாரியும் அல்லள்!
    • பத்திரகாளியும் அல்லள்.
    • துர்க்கையும் அல்லள்.
    • கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்.
  • தான்தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் யார்? 
    • மனுநீதி சோழன்
  • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” யாருடைய கூற்று?
    • “தேரா மன்னா செப்புவது உடையேன்…” கண்ணகியின் கூற்று.
  • “யானோ அரசன் யானே கள்வன்….” யாருடைய கூற்று?
    • “யானோ அரசன் யானே கள்வன்….” பாண்டிய மன்னனின் கூற்று ஆகும்.
  •  மணிமேகலை காப்பியம் குறிப்பு வரைக.
      • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
      • சமயம் – பௌத்தம்
      • பெயர்க்காரணம்: காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்,  மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
      • வேறு பெயர்: மணிமேகலை துறவு 
      • நூல் அமைப்பு: முப்பது காதைகள் கொண்டது.
  • மணிமேகலை காப்பியத்தின் நோக்கம் குறித்து எழுதுக.
      • பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும்.
      • மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை எனலாம்.
  •  
  • தீவதிலகை குறித்து எழுதுக.
    •  மணிபல்லவத் தீவில் அமைந்துள்ள புத்தரின் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்பவர்.
  • பசியினால் விசுவாமித்திரர் செய்த செயல் யாது?
    • பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தார்.
    • கொடிதானப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றார்.
  • அமுதசுரபி குறித்து எழுதுக.
    • மணிபல்லவத் தீவில் ஆபுத்திரன் தனது உயிர் துறக்கும்போது, அவன் பயன்படுத்திய அமுதசுரபி பாத்திரத்தை மணிமேகலை பெற்றாள். தீவ திலகை என்னும் தெய்வம் இதற்கு உதவியது.
    • இந்த பாத்திரத்தில் இருந்து எவ்வளவு உணவு எடுத்தாலும், அது குறையாமல் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது இதன் சிறப்பு. 
  • புத்தபீடிகையின் சிறப்பு குறித்து எழுதுக.
    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான்.
    • புத்த பீடிகையைப்  பார்த்து வணங்கியவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள்.
  • பெரியபுராணம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.
  • சேக்கிழார் குறித்து எழுதுக.
    • இயற்பெயர்: அருண்மொழித் தேவர்
    • சிறப்பு : தொண்டர்சீர் பரவுவார் 
    • காலம்: கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
  • மனக்கோயில் கட்டியவர் யார்?
    • மனக்கோயில் கட்டியவர் பூசலார் ஆவார்.
  • கற்கோவில் கட்டியவர் யார்?
    • கற்கோவில் கட்டியவர் பல்லவ மன்னன் ஆவார்.
  • பூசலார் குறித்து எழுதுக.
    • தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார்.
    • அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார்.
    • நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார்.
    • சிவபெருமானுக்காக மனதில் கோவில் கட்டினார்.
  • கம்பராமாயணம் குறித்து எழுதுக.
    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது.
    • காப்பிய அமைப்பு: இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.
  •  
  • கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
    • கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.
    • அவை,
      • பால காண்டம்
      • அயோத்தியா காண்டம்
      • ஆரணிய காண்டம்
      • கிட்கிந்தா காண்டம்
      • சுந்தர காண்டம்
      • யுத்த காண்டம்
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் துடி என்னும் பறையை உடையவன்.
    • வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன்.
    • தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன்.
    • இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன்.
    • அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
  • குகன் இராமன் மீது கொண்ட அன்பினை விளக்குக.
    • இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய குகன் இராமனுக்காக  தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்து கொடுத்தான்.
    • இராமனைப் பிரியமனமின்றி உடன் கட்டிற்கு வருவதாக உரைத்தான். 
  • குகன் இராமனுக்காக கொண்டு வந்தவை எவை? (அல்லது) இராமனுக்காக குகன் கொணர்ந்த பொருள்கள் யாவை?
    • தேன்
    • மீன் 
  • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் யார்?
    • இராமன் கங்கையைக் கடக்க உதவியாக இருந்தவர் குகன் ஆவார்.
  • “நால்வரோடு ஐவரானோம் …”- யாருடைய கூற்று?.
    • “நால்வரோடு ஐவரானோம் …”-  இராமனின் கூற்று.
  • சீறாப்புராணம் குறிப்பு வரைக.
    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறத்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?
    • சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார்.
  • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் யாது?
    • ‘சீறத்’ என்ற அரபுச்சொல்லின் பொருள் வரலாறு என்பது பொருள் ஆகும்.
  • சீறாப்புராணத்தின் முப்பெரும் காண்டங்களை எழுதுக.
    • விலாதத்துக் காண்டம்
    • நுபுவ்வத்துக் காண்டம்
    • ஹிஜ்ரத்துக் காண்டம் 
  • மானுக்குப் பிணையாக நின்றவர் யார்?
    • மானுக்குப் பிணையாக நின்றவர் நபிகள் நாயகம் ஆவார்.
  • இயேசுகாவியம் குறிப்பு வரைக.
    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.
  • இயேசுகாவியத்தின் ஆசிரியர் யார்?
    • இயேசுகாவியத்தின் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.

நெடுவினாக்கள்

  • சிலப்பதிகாரம் வழக்குரை காதை கதையை விவரி. (அல்லது) பாண்டியன் அவையில் கண்ணகி வழக்குரைத்த விதம் குறித்து விளக்குக.(அல்லது) கண்ணகி பாண்டிய மன்னனுடன் வழக்காடியதை விவரி.

சிலப்பதிகாரம்

    • இயற்றியவர்- இளங்கோவடிகள்
    • சமயம் சமணம்

பெயர்க்காரணம்:

    • காப்பியத்தின் கதை சிலம்பினைக் மையமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • குடிமக்கள் காப்பியம்
    • முத்தமிழ் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்

நூல் அமைப்பு

    • புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டது.

வழக்குரைகாதை

  • பாண்டிமாதேவியின் தீக்கனவு
    • கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனவைத் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள். தோழி! நம் வேந்தனது வெண்கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழும்படியாகவும், அரண்மனை வாயிலில் இடைவிடாது மணியின் ஓசை ஒலிப்பதாகவும் கனவு கண்டேன். எட்டுத் திசைகளும் அப்போது அதிர்வுற்றன. சூரியனை இருள் விழுங்கவும் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றவும் கண்டேன். ஆதலால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்று உள்ளது. எனவே மன்னனிடம் சென்று கனவைக் கூறுவோம்என்று கூறி மன்னனை நாடிச் சென்றாள்.
  • கோப்பெருந்தேவியின் வருகை
      • கோப்பெருந்தேவி மன்னனை நாடிச் செல்லும்போது மகளிர் பலர் தேவியைச் சூழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் கண்ணாடி ஏந்தி வர, சிலர் அணிகலன்களை ஏந்தி வர, சிலர் அழகிய கலன்களை ஏந்தி வர, சிலர் புதிய நூலாடையையும், பட்டாடையையும் ஏந்தி வர, சிலர் வெற்றிலைகளை ஏந்தி வர, சிலர் வண்ணமும் சுண்ணமும் கத்தூரி கலந்த சந்தனக் குழம்பும் ஏந்தி வர, சிலர் தொடையல் மாலை, கவரி, தூபம் ஆகியனவற்றையும் ஏந்தி வந்தனர். கூன் உடைய மகளிரும், குருடும், ஊமையருமான குற்றவேல் செய்யும் மகளிரும் அரசியைச் சூழ்ந்து வந்தனர். நரையுடைய முதுமகளிர் பலர், “கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டியனுடைய தேவியே நீடு வாழ்வாயாகஎன வாழ்த்தினர். தோழியரும் காவல் மகளிரும், தேவி அடியெடுத்து வைக்குந்தோறும் புகழ்ந்து போற்றி வந்தனர். தன் பரிவாரங்களுடன் சென்ற தேவி தன் கணவனிடம் தான் கண்ட கனவின் தன்மையை எடுத்துச் சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் அமர்ந்திருந்தான்.
  • கண்ணகி வாயிற்காப்போனிடம் கூறியது
      • அப்போது சினத்துடன் அங்கு வந்த கண்ணகி, “வாயிற்காவலனே, அறிவு இழந்து நீதி நெறி தவறிய மன்னனின் வாயிற்காவலனே! பரல்களை உடைய சிலம்பு ஒன்றினைக் கையிலே ஏந்தியவளாய், தன் கணவனை இழந்த ஒருத்தி நம் கடைவாயிலில் நிற்கின்றாள் என்று உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாயாகஎன்று கூறினாள்.
  • வாயிற்காவலன் கூற்று
      • வாயிற்காப்போன் மன்னனிடம் சென்று, “கொற்கை நகரத்து வேந்தனே வாழ்க! தென்திசையில் உள்ள பொதிய மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னவனே வாழ்க! பழிச்சொல் இல்லாத பாண்டிய மன்னனே வாழ்க! குருதிக் கொட்டும் தலையைப் பீடமாகக் கொண்டவளும், வேற்படையைக் கையில் ஏந்தியவளுமாகிய கொற்றவை அல்லள்! ஏழு கன்னியரில் இளையவளான பிடாரியும் அல்லள்! சிவபெருமானை நடனமாட வைத்த பத்திரகாளியும் அல்லள். தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் அல்லள். பகைமை கொண்டவள் போலவும், உள்ளத்தில் மிகுந்த சினம் கொண்டவள் போலவும் உள்ள அவள் கையில் பொற்சிலம்பு ஒன்றினை ஏந்தியவளாய், கணவனை இழந்தவளாய்  நம் வாயிற்புறத்தில் வந்து நிற்கின்றாள்என்று கூறினான். அத்தகையவளை இங்கே அழைத்து வருக என ஆணையிட்டான் மன்னன்.
  • கண்ணகி வழக்குரைத்த நிலை
      • வாயிலோன் வழிகாட்ட கண்ணகி உள்ளே சென்றாள். அவளைக் கண்ட பாண்டியன், “கண்ணீர் சிந்தும் கண்களுடன் என் முன் வந்திருப்பவளே! நீ யார்? என வினவினான்.
      • கண்ணகி பெருஞ்சீற்றம் கொண்டு, “ஆராய்ந்து அறியாத மன்னனே! நா்ன என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக. தேவர்களும் வியப்படையுமாறு புறாவின் துன்பத்தைத் தீர்த்த சிபி என்ற மன்னனும், தன் கன்றை இழந்த பசுவின் துன்பத்தைக் கண்டு ஆற்றாமல், அக்கன்று இறப்பதற்குக் காரணமான தன் மகனைத் தன்னுடைய தேர்ச்சக்கரத்தைக் கொண்டு தண்டித்த மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரமே என் ஊராகும். அவ்வூரில் புகழ் பெற்று விளங்கும் பெருங்குடி என்னும் வணிகர் மரபில் வாழும் மாசாத்துவான் என்பவனின் மகனாகப் பிறந்து, வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டு, ஊழ்வினை துரத்த, உன் மதுரை மாநகருக்கு வந்து, என்னுடைய கால் சிலம்பினை விற்பதற்கு விரும்பி, உன்னால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகிஎன்று கூறினாள்.
  • கண்ணகி வழக்கில் வென்றமை
      • கண்ணகியின் சொல்  கேட்ட பாண்டிய மன்னன், “பெண் தெய்வமே கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று. முறை தவறாத அரச நீதியே ஆகும்என்றான். அதற்குக் கண்ணகி, “நல்ல முறையில் நீதி அறிந்து செயலாற்றாத மன்னனே! என் காலில் உள்ள சிலம்பு மாணிக்கக் கற்களைப் பரல்களாகக் கொண்டதுஎன்றாள். பாண்டிய மன்னன், “என் மனைவியின் கால் சிலம்பில் பரல்களாக இருப்பவை முத்துக்கள்என்று கூறினான். பின்பு கோவலனிடமிருந்து பெறப்பட்ட சிலம்பைக் கொண்டு வாருங்கள்என்று கட்டளையிட்டு வரவழைத்து கண்ணகியின் முன் வைத்தான். உடனே கண்ணகி அவர்கள் வைத்த சிலம்பினை எடுத்து உடைத்தாள். அச்சிலம்பிலிருந்து மாணிக்கப் பரல் ஒன்று மன்னனின் முகத்திலும் வாயிலும் தெறித்து விழுந்தன.
  • பாண்டியன் தன் தவறுணர்ந்து இறத்தல்
    • அவ்வாறு தெறித்த மாணிக்கப் பரல் கண்டு திடுக்கிட்ட வேந்தன் வெண்கொற்றக்குடை தாழவும், செங்கோல் வளையவும், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு நீதி தவறிய நான் அரசன் இல்லை. கோவலன் சிலம்பை என்னுடையதாகக் கொண்டதால் நானே கள்வன்”, எனக்கூறி உள்ளம் குமுறினான். துடித்தான். மக்களைக் காக்கும் பாண்டிய நாட்டு ஆட்சிக்கு என் காரணமாகத் தவறு நேர்ந்து விட்டதே என்று பதறினான். கெடுக என் ஆயுள்எனத் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்து இறந்து போனான். கணவனின் மரணம் கண்டு கோப்பெருந்தேவி உள்ளம் நிலை குலைந்து உடல் நடுங்கினாள். தாய் தந்தையரை இழந்தவர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி ஆறுதல் கூற முடியும். ஆனால், கணவனை இழந்தோர்க்கு அங்ஙனம் காட்டலாகாதுஎனக் கருதித் தன் கணனின் கால்களைத் தொட்டு வணங்கி விழுந்து இறந்து போனாள்.
  • மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை விளக்குக. (அல்லது) மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்த விதத்தினை எழுதுக. (அல்லது) அமுத சுரபி பெற்ற மணிமேகலையின் செயல்கள் குறித்து எழுதுக.

மணிமேகலை

    • இயற்றியவர்– சீத்தலை சாத்தனார்
    • சமயம்பௌத்தம்

பெயர்க்காரணம்

    • காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால்மணிமேகலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்

    • இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம்,மணிமேகலை)
    • இந்நூலின் பதிகம் இந்நூலினை மணிமேகலை துறவு என்று குறிப்பிடுகிறது.

நூல் அமைப்பு

    • முப்பது காதைகள் கொண்டது.

பாத்திரம் பெற்ற காதை

    • மணிபல்லவத்தீவின் காவல் தெய்வமாகிய தீவத்திலகை, மணிமேகலையை அறிந்து கொண்டு, அவளிடம் இங்குள்ள கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரனால் விடப்பட்ட அமுதசுரபி என்ற பாத்திரம் உன் கைகளை வந்து அடையும். அந்தப் பாத்திரத்தில் வற்றாமல் உணவு சுரந்து கொண்டே இருக்கும். அதைக் கொண்டு நீ பசித்தவர்களுக்கு உணவு தந்து காப்பாய்” என்று கூறியது. அத்தெய்வம் கூறியவாறு மணிமேகலையிடம் அமுதசுரபி வந்தடைந்தது. மணிமேலை தீவத்திலகையிடம் விடை பெற்றுக் கொண்டு வான் வழி பறந்து வந்து புகார் நகரை அடைகின்றாள். பின்பு அறவண அடிகளைக் காணச் செல்கின்றாள். இந்தச் செய்திகளை இக்காதை விவரிக்கின்றது.

நீயார் என வினவல்

    • மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் தெப்பங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

    • மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்.

நான் தீவதிலகை

    • மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். நல்ல முறையில் சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. (சமந்தகம் என்பது இலங்கையில் உள்ள சிவனொளி பாதமலை) அதனை வலம் செய்து இங்கு வந்தேன். குற்றிமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை பாராட்டுதல்

    • அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அப்படிப் பார்த்து வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் அரியவர். அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். அத்தன்மை மிக்க அணியிழையே! இன்னும் கேட்பாயாக!

அமுத சுரபி

    • “மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும்.

அந்த நாள் இந்த நாளே

    • அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது. இந்தப் பாத்திரத்தில் இடும் உணவானது ஆருயிர் மருந்தாகும். அது எடுக்க எடுக்கக் குறையாது பெருகும். வாங்குபவர் கைகள் வலிக்குமே அன்றி பாத்திரத்தில் குறையாது. மணக்கின்ற மாலை அணிந்த பெண்ணே! அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

    • தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

    • மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசி தீர்க்கும் பணி

    • புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து, “பசியாகிய நோய் இருக்கிறதே அது மேல்குடியில் பிறந்த தகுதியை அழித்து விடும். தூய எண்ணங்களைச் சிதைத்து விடும். கல்வி என்ற பெரும் புணையையும் நீக்கிவிடும். நாணமாகிய அணியையும் போக்கிவிடும். பெருமையான அழகினைச் சீர்குலைக்கும். மனைவியோடு அடுத்தவர் வாசலில் பிச்சை எடுக்க நிறுத்திவிடும். இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது.

பசியால் நாயினைத் தின்றவர்

    • புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின.

உயிர் அளிப்பவர் யார்?

    • கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர். இல்லாத ஏழை மக்களின் பசியை நீக்குவோர்தாம் மேன்மையான அறநெறி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் உணவு தருபவர்களே உயிர் தந்தவர்கள் ஆவர். நீயும் அப்படிப்பட்ட உயிர் தரும் தரும வழியை உறுதியாக மேற்கொண்டாய். கலக்கமற்ற நல்லறத்தினை அறிந்து கொண்டாய்” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

அறம் செய்த பயன்

    • இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கின. அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் அறப்பயனாகி ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது”.

தாய்போல் காப்பேன்

    • “சம்புத்தீவு என்கிற இப்பெரிய நாவலந்தீவிலே தரும நெறிகளை விதைத்து அந்த விளைவினைச் செல்வமாக அனுபவிப்போர் சிலராவர். கந்தலான துணி உடையை உடுத்திக் கொண்டு பசி துன்புறுத்துவதால் வருத்தப்பட்டு, அதிக வெயில் என்று வெறுக்காமலும், மழை அதிகம் என்று சோம்பித் திரியாமலும், செல்வந்தர் வீட்டு வாசல்களில் சென்று நின்று துன்பம் அதிகமாவதால் முன்பிறப்பில் செய்த தீவினை போலும் என எண்ணி அயர்வோர் பலராவர். பெற்ற குழந்தையின் பசியால் வாடிய முகம் கண்டு இரங்கி சுவையான பாலைச் சுரப்பவள் தாய். அந்தத் தாயின் கொங்கைகள் போல சுரந்து உணவளிப்பது இந்த தெய்விகப் பாத்திரம். இந்தப் பாத்திரத்தின் உள்ளே இட்ட அரிய உயிர் மருந்தாகிய உணவு பசியால் வாடிய ஏழைகளின் முகத்தைக் கண்டதும் சுரத்தலைக் காணும் விருப்பமுடையவள் நான்” எனக் கூறினாள் மணிமேகலை.

வானத்தில் பறந்தாள்

    • “அதன் திறத்தினை உன்னிடம் கூற நான் மறந்து விட்டேன். நீ எடுத்துக் கூறினாய். அறமே சாட்சியாக அருள் சுரந்து அது அனைவருக்கும் உணவு தரும். சிறந்தவர்களுக்குத்தான் அது உணவு தரும். அதன் பயனை நீ நன்றாக அறிந்துள்ளாய். தரும வழியில் மற்றவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறாய்! ஆகவே மணிபல்லவம் விட்டு உனது ஊருக்குச் செல்வாயாக!” என்றாள் தீவதிலகை. மணிமேகலை அவளது திருவடிகளில் விழுந்து வணங்கி விடை பெற்றாள். அமுதசுரபியைத் தன் மலர் போன்ற கையில் ஏந்தி மேலே எழுந்து வானத்தில் பறந்து புகார் நகர் நோக்கிச் சென்றாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

    • “சொன்ன சொல் மாறாத மணிமேகலா தெய்வம் கூறிய ஏழாம் நாளும் வந்தது. என் மகள் மணிமேகலை வரவில்லையே, தெய்வம் கூடப் பொய் சொல்லுமா?” என நினைத்து வருந்தினாள் மாதவி. அப்போது அவர்கள் முன் வானிலிருந்து இறங்கித் தோன்றினாள் மணிமேகலை. மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை அவர்களிடம் ஓர் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள். (சுதமதி மாதவியின் தோழி. மணிமேகலைக்குச் செவிலித்தாய். ஆகவே இருவரையும் தாய் என்று கூறினாள் மணிமேகலை).

அறவண அடிகள் திருவடி தொழுவோம்

    • “உங்கள் இருவருக்கும் இந்த மானிடப் பிறப்பிலேயே தீயவினைகளைத் துடைத்து நற்பேறு எய்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான தவநெறி முறைகளை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர். உங்கள் பிறவிப் பயன் இதுவே ஆகும். இதோ இந்தப் புகழ் மிக்க பாத்திரம் அமுதசுரபியாகும். இதனை நீங்களும் வணங்குங்கள்” என்று மணிமேகலை கூற, அவர்களும் வணங்கினர். மேலும் “உண்மையே பேசும் தாய்மார்களை நோக்கிக் குறை காண இயலாத மாபெரும் தவத்தோரான அறவண அடிகளின் பாதங்களை வணங்கிடச் செல்வோம். நீங்களும் வாருங்கள்” என்று அவர்களோடு அறவண அடிகளைக் காணப் புறப்பட்டனர்.
  • பெரியபுராணத்தில் அமைந்துள்ள பூசலார் நாயனார் புராணம் குறித்து விவரி. (அல்லது) பூசலார் நாயனார் கற்கோவில் கட்டிய விதத்தினை விளக்குக. (அல்லது) பூசலார் நாயனார் சிவன்மீது கொண்ட பக்தியை விளக்குக. (அல்லது) பூசலார் கோவில் கட்டிய திறத்தைப் பெரியபுராணம் வழிநின்று விளக்குக.

பெரியபுராணம்

    • இயற்றியவர்: சேக்கிழார்
    • பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
    • இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
    • 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும்.

பூசலார் நாயனார் புராணம்

கதைச் சுருக்கம்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பூசலார். அவர் சிவபக்தியில் சிறந்தவராய், வேதத்தில் வல்லவராய் விளங்கினார். நாயனார் திருக்கோயில் ஒன்றினைக் கட்டிக் குடமுழுக்கு நீராட்ட விரும்பினார். அதற்குரிய பொருள் கிடைக்காமையால் மனத்திற்குள்ளேயே எல்லாப் பொருள்களையும் கொண்டு சேர்த்துப் பிரதிட்டை செய்யும் நாளையும் குறித்தார். அச்சமயத்தில் காஞ்சி மாநகரில் பல்லவ வேந்தன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தான். சிவபிரான் மன்னன் கனவில் தோன்றித் “திருநின்றவூரில் பூசல் என்பவன் கோயில் கட்டிப் பிரதிட்டை செய்ய உள்ளான். நாம் அங்குச் செல்வதால் உனது ஆயலப் பிரதிட்டையைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்” என்றருளினார். உடனே மன்னர் விழித்தெழுந்து திருநின்றவூரை அடைந்தான். ஆங்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் இல்லை என அறிந்தான். பின்பு பூசலாரை அடைந்து தொழுது “அடிகள் கட்டிய திருக்கோயில் எங்குள்ளது? என வினவி அத்திருக்கோயிலின் பிரதிட்டை நாள் இன்று என இறைவரால் அறிந்தேன்” என்றான். பூசலார் மருட்சியடைந்து தாம் மனத்துக்கண் கட்டிய கோயிலின் முறையினை விளக்கினார். மன்னன் நாயனாரைத் தொழுது விடைபெற்றான். நாயனார் தம் மனக்கோயிலுள் சிவபிரானைப் பிரதிட்டை செய்தார். சில காலம் மனக்கோயில் வழிபாடு செய்து இறைவர் திருவடி நிழலைச் சேர்ந்தார்.

பூசலார் தம் மனதில் கோயில் அமைத்தல்

    • பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த சிவபிரானுக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்று எண்ணி, எந்தப் பொருள்களும் இல்லாத வறுமையில், மனத்தின்கண் எழுந்த உணர்வுகளைக் கொண்டு நல்ல ஆலயத்தை உருவாக்கிய திருநின்றவூரின்கண் விளங்கும் பூசலார் தம் நினைவால் அமைத்த கோயிலை உரைக்கத் தொடங்கினேன்.
    • உலகில் ஒழுக்கநெறி உயர்ந்து மேவும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நான்கு வேதங்களும் நன்கு ஓதப்பெறும் தொன்மையான திருநின்றவூர். அங்கு இறைவனின் அடியார்கள் தம் கொள்கையில் சிறந்து நிற்பர்.
    • வேத நெறி தழைத்து மேவும் வகையில் பூசலார் திருநின்றவூரின்கண் தோன்றினார். அவருடைய உணர்வுகள் யாவும் சிவபிரான் திருப்பாதங்களையே சார்ந்தன. அன்பு மாறாத நெறி பெருகி வளரும் தன்மையில் வாய்மையுடன், வேதத்தின் நியதியில் பொலிவுடன் விளங்கினார்.
    • சிவனடியார்களுக்கு ஏற்ற பணிகளைச் செய்தலே தமக்குரிய திருத்தொண்டு என்று எண்ணியவராக, சிவபிரான் எழுந்தருளுவதற்கு ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் பொருட்செல்வம் இல்லை என்று உணர்ந்தும், கோயில் அமைக்கும் எண்ணத்தில் உறுதியுடன் நின்றார்.
    • கோயில் அமைக்க அவருடைய உள்ளம் விரும்பியது. ஆனால், கோயில் அமைப்பதற்குரிய பெருஞ்செல்வத்தை வருந்தித் தேடியும் கிடைக்காததால் என்ன செய்வேன் என்று மனம் வருந்துகின்றார். மனதுள்ளேயே அக்கோயிலைக் கட்ட வேண்டும் என்று எண்ணி அதற்குரிய செல்வத்தைச் சிறுகச் சிறுகத் தம் சிந்தனையிலேயே திரட்டிக் கொண்டார்.
    • தொழிற் கருவிகளோடு கட்டுதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் தேடிக் கொண்டு ஆயலம் எடுப்பதற்குரிய நல்ல நாளும் விரும்பி, ஆகம விதிப்படி அடிநிலை எடுத்து, தம் அன்பின் நிறைவினால் இரவும் பகலும் உறங்காது மனதுக்குள்ளேயே கோயிலைச் செதுக்கினார்.
    • கோபுரத்தின் அடி முதல் முடி வரை அமைந்துள்ள அடுக்குகள் யாவற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமையுமாறு மனத்தினால் அமைத்து, விமானத்தின் முடிவில் சிகரமும் சிற்ப நூலில் சித்திரங்களும் உருவாக்கினார். இத்தகைய பணி யாவும் நீண்ட நாட்கள் செய்யப்படும் பணியாக தமது நினைவில் நிலைநிறுத்திக் கொண்டார்.
    • விமானத்தின் உச்சியில் கூர்மையான சிகரம் அமைத்து, சுண்ணச் சாந்து பூசி சிற்ப அலங்காரங்களைச் செய்த பின்பு, திருமஞ்சனத்திற்குரிய கிணறும், கோயிலைச் சுற்றி மதில்களைக் கட்டிக் குளமும் அமைத்தார். சிவபிரான் திருமேனியின் திருவுருவமாகிய சிவலிங்க மூர்த்தியைப் பிரதிட்டை செய்யும் நாளைக் குறித்தார்.

பல்லவ மன்னன் கனவில் சிவபிரான் தோன்றுதல்

    • பல்லவ வேந்தன் காஞ்சி மாநகரில் பெருஞ்செல்வத்தில் கற்கோயிலை முழுமையாகக் கட்டி முடித்தான். பின்பு சிவபிரானைப் பிரதிட்டை செய்ய குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அதற்கு முன் நாள், கொன்றை மலர் சூடிய சிவபிரான் மன்னன் கனவில் தோன்றினார்.
    • “திருநின்றவூரில் பூசல் என்னும் அன்பன் பலநாள் மனத்துக்கண் அமைத்த புகழ் மிக்க ஆலயத்துள் நாளை நாம் புகுகின்றோம். ஆதலால் நீ செய்யும் குடமுழுக்குச் செயலை நாளைய தினம் தவிர்த்துப் பின்பு ஒருநாளில் அமைத்துச் செய்வாய்” என்று கூறி மறைந்தார்.

பல்லவ மன்னன் பூசலாரைக் கண்டு வணங்குதல்

    • திருத்தொண்டராகிய பூசலார் நாயனாரின் பெருமையை சிவபிரான் சொல்லக் கேட்ட பல்லவ மன்னன், அத்திருப்பணி செய்தவரைக் கண்டு வணங்குதல் வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருநின்றவூரை சென்றடைந்தான்.
    • திருநின்றவூரை அடைந்த வேந்தன், அன்பராகிய பூசலார் அமைத்த கோயில் எப்பக்கம் உள்ளது என்று அங்கு வந்தவர்களைக் கேட்க, அவர்களும், “தாங்கள் கூறும் பூசலார், கோயில் எதுவும் அமைத்தது இல்லை” என்றனர். அந்நிலையில் இறைவனின் அடியவர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வருமாறு உரைத்தான் மன்னன்.
    • அன்பர்கள் அனைவரும் வந்து அரசனைக் காண, மன்னன் அவர்களிடம் “பூசலார் என்பவர் யார்?” என்று வினவ, அவர்களும், “குற்றம் இல்லாத அந்த அன்பர் இந்த ஊரைச் சேர்ந்தவர்” என்று கூற, பூசலாரை நாடிச் சென்றான் மன்னன்.
    • திருத்தொண்டராகிய நாயனாரைக் கண்ட மன்னன் தொழுது போற்றி, “எட்டுத் திசைகளில் உள்ளவரும் தொழுமாறு நீங்கள் கட்டிய கோயில் எங்குள்ளது? இன்று அக்கோயிலில் தேவர் தலைவனான சிவபிரானைப் பிரதிட்டை செய்யப் போவதை அறிந்து இறைவன் அருள் பெற்று உம்மைக் கண்டு அடிபணிய வந்தேன்” என்று கூறினான்.

பூசலார் தாம் கட்டியது மனக்கோயில் என்று உரைத்தல்

    • மன்னன் உரை கேட்ட நாயனார் மருட்சி அடைந்தவராக, “என்னை ஒரு பொருளாகக் கொண்டு எம்பிரான் அருள் செய்தார். பணமும் பொருளும் கிடைக்கப்பொறாமையால் உள்ளத்தால் முயன்று நினைந்து நினைந்து அமைத்த கோயில் இதுவேயாகும்” என்று தாம் மனத்துள் எழுப்பிய ஆலயத்தை மன்னனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.
    • நாயனாரின் உரை கேட்ட மன்னன், அங்கு நிகழ்ந்த அதியசயத்தை எண்ணிக் “குற்றமற்ற திருத்தொண்டர்தம் பெருமைதான் என்னே!” என்று போற்றி, தான் சூடிய மாலை தரையில் பதியுமாறு நிலத்தில் வீழ்ந்து பூசலாரை வணங்கினான். பின்பு முரசு ஒலிக்கும் படையோடு தன் காஞ்சி மாநரை அடைந்தான்.

பூசலார் தம் மனக்கோயிலில் சிவபிரானைப் பிரதிட்டை செய்தல்

    • பூசலார் தாம் சிந்தையால் அமைத்த கோயிலில் சிவபிரானை நற்பெரும் பொழுதில் பிரதிட்டை செய்தார். பல நாட்கள் நலம் விளங்கும் பூசைகள் யாவும் செய்தார். திருநடனம் புரியும் இறைவனின் அழகிய திருப்பாதத்தில் சேர்ந்தார்.
  • கம்பராமாயணம் குகப்படலம் குறித்து விவரி. (அல்லது) குகன் இராமன் மீது கொண்ட பக்தியைக்/அன்பினைக் குகப்படலம்வழி விளக்குக.

கம்பராமாயணம்

    • இயற்றியவர்: கம்பர்
    • பெயர்க் காரணம்: இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. 

காப்பிய அமைப்பு

    • இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது.

குகப்படலம்

    • வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.

குகனின் அறிமுகம்

    • இராமன் முனிவர்கள் தந்த விருந்தை அருந்தியிருந்தபொழுது, குகன் என்னும் பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன். அப்படிப்பட்ட குகன் முனிவர் இருப்பிடத்தில் தங்கியுள்ள இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு வந்தான்.

இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல்

    • பொய்மை நீங்கிய மனத்தையும், இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தையும் உடைய குகன் தன்னுடைய சுற்றத்தார் தூரத்தே நிற்க, அம்பையும், வில்லையும், வாளையும் நீக்கிவிட்டு, இராமன் தங்கியிருந்த தவச்சாலையின் வாயிலை அடைந்தான்.

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்

    • வாயிலை அடைந்த குகன் தன் வருகையை உணர்த்தக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் தம்பி இலக்குமணன் அவனை அணுகி, “நீ யார்?” என்று வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி, “ஐயனே! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடன் ஆவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான்.

குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல்

    • இலக்குமணன் “நீ இங்கேயே இரு” என்று குகனிடம் கூறிவிட்டு, தவச் சாலைக்குள் சென்று தன் தமையன் இராமனைத் தொழுது, “அரசே! தூய உள்ளம் பெற்றுள்ளவனும், தாயைக் காட்டிலும் மிக நல்லவனும், அலை மோதும் கங்கையில் செல்லும் ஓடங்களுக்குத் தலைவனுமான குகன் என்னும் ஒருவன் உன்னைக் காண்பதற்காக, பெருந்திரளாகத் தன் சுற்றத்தாருடன் வந்துள்ளான்” என்று தெரிவித்தான்.

இராமனைக் கண்டு வணங்கிய குகன்

    • இராமனும் மனமுவந்து, “நீ அந்தக் குகனை என்னிடம் அழைத்து வா” என்று கூறினான். இலக்குமணனும் குகனை நோக்கி, “உள்ளே வா” என்றான். அதைக் கேட்ட குகன் விரைவாக உள்ளே சென்று, இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்தான். தன் கருமை நிற முடிகள் தரையில் படுமாறு அவனை வணங்கி எழுந்து, உடல் வளைத்து, வாயினைத் தன் கைகளால் பொத்திப் பணிவோடு  நின்றான்.

குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல்

    • “இங்கே அமர்க” என்று குகனிடம் இராமன் கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. இராமனிடம் அளவு கடந்த அன்பை உடைய அந்தக் குகன், இராமனை நோக்கி, “தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?” என்று கேட்டான். இராமன் முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்.

குகனது அன்பை இராமன் பாராட்டுதல்

    • “மனம் மகிழும்படி உள்ளத்திலே உண்டான அன்பின் தூண்டுதலால் பக்தி ஏற்பட அருமையாகக் கொண்டு வரப்பட்ட இத்தேனும் மீனும் அமிழதத்தைக் காட்டிலும் சிறந்தவை அல்லவா? நீ கொண்டு வந்தவை எவையாயினும் சரி, அவை அன்போடு பொருந்தியவை என்றால் தூய்மையானவையே! அவை எம்மைப் போன்றவர்கள் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான் இராமன்.

விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல்

    • ஆண் சிங்கம் போன்ற இராமன் “நாம் இன்று இத்தவச்சாலையில் தங்கி நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ உன் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்தில் உவகையோடு தங்கிவிட்டு, விடியற்காலை நாங்கள் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக” என்று கூறினான்.

குகனது வேண்டுகோள்

    • இராமன் இவ்வாறு கூறியதும், குகன் “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாகக் கொண்டவனே! உன்னை இந்தத் தவவேடத்தில் பார்த்த என் கண்களைப் பறித்து எறியாத கள்ளன் நான். இந்தத் துன்பத்தோடு உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னாலான அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல்

    • மாலை சூட்டப்பட்ட வில்லை உடைய இராமன், குகன் கூறிய கருத்தைக் கேட்டான். உடனே சீதையின் முகத்தை நோக்கி, இலக்குமணனின் திருமுகத்தை நோக்கி, அவர்கள் மனமும் குகனின் அன்பை ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்” என்று கூறி கருணையினால் மலர்ந்த கண்கள் உடையவனாகி, “இனிமையான நண்பனே! நீ விரும்பியவாறு இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.
    • இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன், இராமன்  திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து, அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு, தானும் கட்டமைந்த வில்லைப் பிடித்து, வாளையும் அரைக்கச்சிலே கட்டி, கூரிய அம்மைப்பிடித்து, இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு, அத்தவச்சாலையில் அம்மூவரையும் காவல்செய்து  நின்றான்.

இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல்

    • “மனு குலத்தில் வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குமணன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல அதைக் கேட்டு இரங்கியவனான குகன் மிக்க துன்பமுற்று, “பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லை போலும். இதென்ன வியப்பு” என்று கூறி இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான்.

கதிரவன் மறைதல்

    • இருள் போன்ற பகையைத் தொலைத்து, திசைகளை வென்று, அனைவர்க்கும் மேலாக விளங்கி, தனது ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி, உயர்ந்த புகழை நிலைக்கச் செய்து, உலகத்தில் உள்ள அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்று கருணை காட்டி, பின் இறந்து போன வலிமை பெற்ற மாவீரனான தசரதனைப் போல செந்நிறக் கதிர்களைப் பெற்ற சூரியன் மறைந்தான்.

இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல்

    • மாலை வேலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செப்பமான முறையில் செய்து, அங்கு தங்கிய இராமனும், பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற சீதையும் பரந்த பூமியில் பரப்பப்பட்ட படுக்கையில் படுத்தனர். இலக்குமணன் வில்லை ஏந்திக் கொண்டு விடியற்காலை தோன்றும் வரையிலும், கண்ணையும் இமைக்காமல் விழிப்போடு காத்து நின்றான்.

இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுதும் கண்ணீர் வழிய நிற்றல்

    • யானைக் கூட்டத்தைப் போலத் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றத்தாரை உடையவனும், அம்பு தொடுக்கப்பட்ட வில்லை உடையவனும், வெம்மை ஏறிக் கொதித்து நிலைகுலையும் மனத்தை உடையவனும், இமைக்காமல் விழித்திருக்கும் கண்களை உடையவனும், ஓடங்களுக்குத் தலைவனுமான குகன், கண் இமைக்காது நின்ற இலக்குமணனைப் பாரத்தும், இராமன் நாணற் புல்லிலே படுத்திருக்கும் நிலையைப் பார்த்தும், கண்ணீர் அருவியைச் சொரியும் மலை போன்று நின்றான்.

கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும்

    • உலகத்து உயிர்களைப் போலப் பிறத்தல் என்பதைப் பெறாதவனான சூரியன் அளவற்ற பிறப்புகளை உடைய உயிர்கள் யாவும் இறக்கும் முறை இதுதான் என்று உலகத்தாருக்குக் காட்டுகின்றவனைப் போல முந்திய நாள் மாலையில் மறைந்தான். அடுத்த நாள் காலையில் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கும் முறை இதுதான் என்று காட்டுகின்றவனைப் போல உதித்தான். ஆதலால் சொர்க்கம் முதலான சிறந்த உலகங்கள் எவையாயினும், அவற்றை மறந்து விடும் வழியை (வீடுபேறு) நினைப்பீராக.
    • சேற்றில் தோன்றும் செந்தாமரை மலர்கள் சூரியனது தோற்றத்தைக் கண்டனவாய், செக்கச் செவேல் என்று மலர்ந்தன. அச்சூரியனைக் காட்டிலும் வேறான ஒரு கருஞ்சூரியனைப் போன்ற இராமனைக் கண்டு, சீதையின் ஒளி பொருந்திய முகம் என்னும் தாமரையும் மலர்ந்தது.

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல்

    • பகைவருக்கு அச்சம் தரும் தோளில் வில்லை உடைய இராமன், விடியற்காலையில் செய்ய வேண்டிய கடமைகளை விருப்பத்தோடு செய்து முடித்து, முனிவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர அங்கிருந்து புறப்பட்டான். குகனை நோக்கி, “ஐயனே! எம்மைக் கொண்டு செல்வதற்குரிய ஒடத்தை விரைவாகக் கொண்டு வருக” என்று கூறினான்.

இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல்

    • இராமன் இட்ட கட்டளையைக் கேட்ட குகன், கண்ணீரைப் பொழியும் கண்களையுடைவனாக, உயிர் வாடுகின்றவனாய், இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாதவனாய், சீதையோடு இராமனின் திருவடி வணங்கித் தனது எண்ணத்தைச் சொல்லலானான்.
    • “ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனே! நாங்கள் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். நாங்கள் வாழும் இடம் காடே ஆகும். நாங்கள் குறையற்றவர்கள். வலிமை பெற்றவர்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம். எங்களை உங்கள் உறவினராகக் கருதி, எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கி இருப்பாயாக”
    • “எம்மிடம் தேன் உள்ளது. தினையும் உள்ளது. அவை தேவர்களும் விரும்பி உண்பதற்கு உரியவையாகும். மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போல் அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்குக் காடு இருக்கிறது. நீராடுவதற்குக் கங்கை இருக்கிறது. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக. இப்போதே எம்மோடு வருக”
    • உடுத்திக் கொள்ள மெல்லிய ஆடை போன்ற தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன. தொங்கவிடப்பட்ட பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறுகுடிசைகள் உள்ளன. விரைந்து செல்ல கால்கள் உள்ளன. வில்லைப் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் ஒலிக்கும் வானத்தின் மீதுள்ள பொருளாக இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து கொடுப்போம்.
    • “எனக்குப் பணிசெய்வோராகிய வில்லை ஏந்திய வேடர்கள் ஐந்நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேவர்களைக் காட்டிலும் வலிமை பெற்றவர்கள். எங்கள் குடியிருப்பில் நீ ஒரே ஓரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவாம். அதைக் காட்டிலும் வேறான ஒரு சிறப்பு எங்களுக்கு இல்லை” என்றான் குகன்.

மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல்

    • குகனது வேண்டுகோளைக் கேட்ட இராமனும் அவனிடம் கொண்ட மனக் கருணை அதிகமாக வெண்ணிறப் பற்கள் தோன்றச் சிரித்தான். “வீரனே! நாங்கள் அந்தப் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள முனிவரை வழிபாடு செய்து நாங்கள் வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறினான்.

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

    • இராமனின் கருத்தை அறிந்த குகன் விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமன், அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிக் கொண்டு பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியைப் பெற்ற சீதையோடும் இலக்குமணனோடும் அப்படகில் இனிதாக ஏறினான்.
    • ஆற்றிலே படகை விரைவகச் செலுத்து என்றான் இராமன். அந்த இராமனுக்கு உண்மையான உயிர் போன்றவனான குகனும், மடங்கும் அலைகளை உடைய கங்கை ஆற்றிலே செலுத்திய பெரிய படகு விசையாகவும், இள அன்னம் நடப்பதைப்போல அழகாகவும் சென்றது. கூரையில் நின்றவர்களான முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பிலே பட்ட மெழுகைப் போல மனம் உருகினார்கள்.
    • பாலைப் போன்ற இனிய மொழி பேசும் சீதையும், சூரியனைப் போன்ற இராமனும், சேல் மீன்கள் வாழும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருக்க, நீண்ட கோலினால் நீரைத் துழாவிச் செலுத்தப்பட்ட அந்தப் பெரிய படகு, பல கால்களை உடைய பெரிய தண்டு போல விரைவாகச் சென்றது.
    • சந்தனத்தை அணிந்துள்ள மணற்குன்றுகளாகிய பெரிய கொங்கைகளை உடைய சிறந்த கங்காதேவி, ஒளி வீசும் மாணிக்க மணிகள் மின்னுவதால், நறுமணம் வீசும் தாமரை மலரைப் போலச் செந்நிறவொளி பரவப் பெற்ற தெள்ளிய அலைகள் என்னும் நீண்ட கைகளால், தான் ஒருத்தியே அப்படகை ஏந்தி அக்கரையில் சேர்ந்தனள்.

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

    • கங்கையின் மறு கரையை அடைந்த இராமன் தன்னிடம் அன்பு கொண்ட குகனை நோக்கி, “சித்திரக் கூடத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லுக” என்று கேட்டான். குகன் இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.
    • “நான் உங்களுடன் வரும் பேறு பெறுவாயேயானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும், அறியும் வல்லமை உடைய நான் தக்கபடி வழிகாட்டுவேன். பழுது நேராமல் நல்லனவாகிய காய்களையும், கனிகளையும் தேனையும் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன். ஆங்காங்கே தங்குவதற்குத் தகுந்த குடில் அமைத்துக் கொடுப்பேன். ஒரு நொடிப் பொழுதும் உம்மைப் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “தீய விலங்குகளின் வகைகளை, நீங்கள் தங்கும் இடத்தைச் சூழ்ந்த எல்லாத் திசைகளிலும் நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயவனாகிய மான் மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் விரும்பிய பொருளைத் தேடிக் காண்டு வந்து கொடுப்பேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்று குகன் கூறினான்.
    • மற்போரிலும் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! செல்லும் இடம் மலைப் பகுதியானாலும் அங்கே கவலைக் கிழங்கு முதலியவற்றைத் தோண்டி எடுத்துத் தருவேன். வெகு தொலைவில் உள்ள வழியிலும் சென்று அங்குள்ள நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன். பலவகையான வில்லைப் பெற்றுள்ளேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். உங்களுடைய மலர் போன்ற திருவடியை ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
    • “ஒப்பற்ற மார்பை உடையவனே! தாங்கள் சம்மதித்தால் எனது படையை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பொழுதும் உங்களைப் பிரியாது உங்களுடன் இருப்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும் உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து போவேன். எந்தப் பழியும் பெறாதவனாகிய நான் உம்மோடு வருவேன்” என்று குகன் கூறினான்.

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

    • குகன் கூறிவற்றைக் கேட்ட இராமன் “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குமணன் உனக்குத் தம்பி. அழகிய நெற்றியைப் பெற்ற இச்சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான்.
    • “துன்பம் உண்டு என்றால் சுகமும் உண்டு. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணைந்திருக்கப் போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே. உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது எல்லையற்ற அன்புடைய உடன்பிறந்தார்களாகிய நாம் ஐவர் ஆகிவிட்மோம்” என்றான் இராமன்.
    • ஒளி வீசும் கூரிய வேலை உடையவனே! நான் காட்டில் வாழும் காலமெல்லாம் உன் தம்பியாகிய இலக்குமணன் என்னுடன் இருக்கப் போகிறான். எனவே துன்புறுத்தும் வகைகள் எவை? ஒன்றும் இல்லை. உன் இருப்பிடத்திற்குச் சென்று நான் இருந்து மக்களைக் காப்பது போலக் காப்பதற்கு உரியவன் நீ! வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வடக்கு நோக்கி வரும் அந்த நாளில் உன்னிடம் உறுதியாக வருவேன். நான் சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்”
    • உன் தம்பியாகிய பரதன் அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பதற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான். நீ என்னுடன் வந்து விட்டால் இங்குள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள். நீயே சொல். உன் சுற்றத்தார் என் சுற்றத்தார் அல்லவா? அதனால் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் இல்லாமல் மிகுந்த துன்பத்தை அடைதல் தகுமா? இங்குள்ள என் சுற்றத்தாரை என் கட்டளையை ஏற்று இனிதாகக் காப்பாயாக” என்றான் இராமன்

குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும்

    • இராமன் இட்ட கட்டளையை மீறாதவனும் அவனைப் பிரிவதால் உண்டான துன்பத்திலிருந்து நீங்காதவனும் நோய் கொண்டவன் என்று பிறர் நினைக்குமாறு பிரிவுத் துன்பத்தை உடையவனுமான குகன் இராமனிடம் விடை பெற்றுக் கொண்டான். பின்பு இராமனும் இலக்குமணனும் அழகிய ஆபரணங்களை அணிந்த மயிலைப் போன்ற சீதையோடு அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.
  • குகனின் தோற்றம் குறித்து எழுதுக.
    • குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
    • அந்தக் குகன் துடி என்னும் பறையை உடையவன். வேட்டைக்குத் துணை செய்யும் நாய்களை உடையவன். தோலினால் தைக்கப்பட்ட செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். இருள் நெருங்கி நிறைந்ததைப் போன்ற நிறத்தை உடையவன். அவனது பெரிய சேனை அவனைச் சூழ்ந்திருப்பதால் நீர் கொண்டு கார் மேகம் இடியோடு கூடித் திரண்டு வந்ததைப் போன்ற தன்மை உடையவன்.
    • ஊதுகொம்பு, துந்துபி என்னும் பறை, சங்கு, முழங்கும் பேரிகை, பம்பை என்னும் பறை ஆகிய இசைக்கருவிகள் நிறைந்துள்ள படையை உடையவன். இலை வடிவமான அம்புகளை உடையவன். ஓடங்களுக்குத் தலைவன். யானைக் கூட்டத்தைப் போன்று பெரிய சுற்றத்தார்களை உடையவன்.
    • காழகம் (அரைக்கால் சட்டை) என்னும் ஆடை அணிந்தவன். கங்கை ஆற்றின் ஆழத்தைக் கண்டறிந்த பெருமையை உடையவன். இடுப்பிலிருந்து தொங்கவிட்ட செந்நிறத் தோலை உடையவன். இடுப்பைச் சுற்றிக் கட்டிய, ஓன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்.
    • பற்களைத் தொடுத்தது போன்ற பல அணிகலன்களைப் பூண்டவன். வீரக்கழலை அணிந்தவன். தலை மயிரில் நெற்கதிர்களைச் செருகிக் கொண்டவன். சினம் வெளிப்பட மேலேறி வளைந்த புருவத்தை உடையவன்.
    • பனை மரம் போன்று நீண்டு வளர்ந்துள்ள கைகளை உடையவன். பாறை போன்ற மார்பினை உடையவன். எண்ணெய் பூசப்பட்ட இருளைப் போன்ற கருநிற உடம்பை உடையவன்.
    • தன் இடுப்பில் குருதிக் கறை படிந்த வாளை உடையவன். நஞ்சை உடைய நாகமும் கண்டு நடுங்குகின்ற கொடிய பார்வையை உடையவன். பைத்தியக்காரர் போல் தொடர்பில்லாத பேச்சை உடையவன். இந்திரனின் வச்சிராயுதம் போன்று உறுதியான இடையை உடையவன்.
    • விலங்குகளின் இறைச்சியையும், மீனையும் உண்ட புலால் நாற்றம் பொருந்திய வாயை உடையவன். சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத முகத்தினை உடையவன். கோபம் இல்லாதபோதும் கனல் கக்குமாறு பார்ப்பவன். யமனும் அஞ்சும்படி அதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன்.
    • சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் பேரலைகள் பெற்ற கங்கை ஆற்றின் அருகில் அமைந்த நகரத்தில் வாழ்பவன்.
  • சீறாப்புராணம் மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து விளக்குக.(அல்லது) நபிகள் நாயகம் மானுக்கு உதவிய விதத்தினை விவரி.(அல்லது) மானுக்குப் பிணை நின்ற படலம் குறித்து கட்டுரைக்க.

சீறாப்புராணம்

    • ஆசிரியர் : உமறுப்புலவர்
    • ‘சீறா’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வாழ்க்கை’ அல்லது ‘வாழ்க்கை வரலாறு’ என்று பொருள். புராணம்’ என்றால் ‘வரலாறு’ என்று பொருள். எனவே, சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்’ ஆகும். 
    • மூன்று காண்டங்களையும், மொத்தம் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட ஒரு காவியம் ஆகும்.

மானுக்குப் பிணை நின்ற படலம்

முகமது நபி மலை வழியே சென்ற காட்சி

    • மேகம் வானில் குடையாக இருந்து நிழல் தருகின்றது. மலர்கள் தேனைச் சிந்துகின்றன. மலையைப் பார்க்கிலும் திண்ணிய தோள்களை உடைய வள்ளல் முகமது நபி அவர்கள் குற்றமற்ற வேதத்தினை பொழிந்து இஸ்லாம் எனும் மார்க்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், மக்கமா நகரத்தின் எல்லையை விட்டு அகன்று தன் சீடர்களுடன் சோலைகள் சூழ்ந்த ஒரு மலை வழியாகச் சென்று கொண்டிருக்கிறார். அவ்வனத்தில் வேடன் ஒருவன் மான் ஒன்றை வலையில் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு மானை நோக்கிச் சென்றார்.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.

மானைக் கண்ட நபிகளின் நிலை

    • வேடன் ஒரு மானைக் கோபத்துடன் தன் வலையில் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதைத் தன் கண்களால் கண்டார் நபி பெருமான். செழிப்புற்ற சோலை கொண்ட மலை வழியே சென்ற நபிகள், தேன் சிந்தும் மலர்களைப் பார்க்கவில்லை. மலையில் வீழ்கின்ற அருவிகளைப் பார்க்கவில்லை. நல்ல நிழலைப் பார்க்கவில்லை. ஈச்ச மரங்களின் காய்களையும், அவை மழை போல பொழிவதையும் பார்க்கவில்லை. வேடனால் கட்டுண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த அந்த மானையே பார்த்துக் கொண்டு அதன் அருகே சென்றார்.

நபிகளைக் கண்ட மானின் நிலை

    • கருணை மிகுந்த கண்களும், அழகு பொருந்திய முகமும், கஸ்தூரி மணம் கமழும் உடலும் கொண்டு தம்மை நோக்கி வருவது பரிசுத்தத் தூதராகிய முகமது நபிகள் என்று நிம்மதி அடைந்து, “இறைவனது தூதர் வந்து விட்டார், எனவே இவ்வேடனால் நம் உடலுக்கும் உயிருக்கும் இனி துன்பமில்லை. நம் கன்றையும் மானினத்தோடு சேர்ந்து காணலாம்” என்று தனக்குள் மகிழ்ந்தது.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.

நபிகளிடம் மான் விடுத்த வேண்டுகோள்

    • வேடனிடம் சிக்குண்ட மான் நபிகள் நாயகத்திடம், “விலங்கு சாதியாயினும் நான் கூறும் சொற்களைக் கேட்பீராக! நான் இவ்வேடனால் இறப்பதற்கு அஞ்சவில்லை. பிறந்த உயிர்கள் ஓருநாள் இறப்பது நிச்சயம். நான் என் கலைமானுடன் பிரிவில்லாமல் சில நாள் வாழ்ந்தேன். அன்புடன் ஒரு கன்றினையும் ஈன்றேன். இனி நான் எது குறித்து வாழ வேண்டும். மூங்கில் இலைப் பனி நீர் போல இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது. காட்டில் எங்காவது இறவாமல் உம்முடைய முகம் நோக்கி இறப்பதே மேலானது. வரிப்புலியின் முழக்கம் கேட்டு மானினம் சிதறித் தனித்தனியாக ஓடிப் பிரிந்தது. என்னைக் காணாது ஆண்மான் காட்டில் தேடி அலைந்ததோ? அல்லது வரிப்புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என் பிரிவினால் புல்லினை உண்ணாமல் நீரினை அருந்தாமல் கண்ணீர் வழிய நெருப்பில் இட்ட இளந்தளிர் போல உடல் பதைத்து நிற்கும். என் கன்று நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் பிறந்தது. எனது மடியில் சுரந்த பாலும் வழிகின்றது. என் கன்று தன் தந்தையிடம் சேர்ந்ததோ? புலியின் வாயில் அகப்பட்டு இறந்ததோ? என்னைத் தேடி அலைகின்றதோ? உன்றும் அறியேன். எனக்கு இதுவன்றி வேறு கவலையில்லை.
    • கலிமா என்னும் மூலமந்திரத்தின் வழியாக, அனைவரையும் சுவர்க்கத்தில் புகச் செய்யும் புண்ணியனே! இவ்வேடனின் பசியைத் தீர்க்க விருப்பமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணைத்துள்ள பிணைப்பை நீக்கி, என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால் நான் என் கலைமானைச் சேர்ந்து அதன் கவலையைப் போக்கி என் நிலையை என் இனத்திற்குச் சொல்லி விட்டு என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டுச் சில மணி நேரத்தில் திரும்பி விடுவேன்” என்று வேண்டி நின்றது.

நபிகள் பிணையாக இருக்க இசைந்தமை

    • மானின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள், வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான் இதற்குப் பிணையாக நிற்கிறேன். எனவே இதனை விடுதலை செய்து விடு” என்று கூறினார்.

வேடனின் மறுமொழி

    • நபிகளின் உரையைக் கேட்ட வேடன் சிரித்து, “முட்கள் நிறைந்த காட்டில் முகத்து வியர்வை உள்ளங்கால் வரை நனைய ஓடி எந்த வேட்டையும் கிடைக்கப் பெறாத நிலையில் அம்மானைப் பிடித்துத் தூக்கி வந்தேன். இம்மான் தசையால் என் பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நீங்கள் எனக்கு வருத்தம் தரும் சொற்களைக் கூறினீர்கள். இச்சொற்கள் உமக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருத்தமற்றவை. காட்டில் பிடித்த மானை விட்டுவிட்டால் அது மீண்டும் மனிதனிடம் வருவது முன் எங்கும் நடந்தது உண்டோ? அறிவுடையவர்கள் இவ்வாறு பேசுவது உண்டோ? எனவே ஊனம் மிக்க இச்சொல்லைக் கைவிடுக” என்றான்.

நபியின் மறுமொழி

    • வேடனின் சொற்களைக் கேட்ட நபிகள், “குறிப்பிட்டவாறு உன் பசி தீர்க்க இந்த மான் வராவிட்டால் ஒன்றிற்கு இரண்டாக நான் மான்களைத் தருகிறேன்” என்று வேடனிடம் கூறினார். அது கேட்ட வேடன் நபிகளின் மீது நம்பிக்கை வைத்து நபிகளைப் பிணையாக ஏற்றுக் கொண்டு மானை விடுவித்தான்.

கலைமானின் வேண்டுகோளும், பிணைமானின் நேர்மையும்

    • வேடனிடம் இருந்த மீண்ட மான் வேறு ஒரு காட்டில் தன் மான் கூட்டத்தையும், தனது குட்டியையும் ஆண்மானோடு கண்டு மகிழ்ச்சியுற்றது. பின்பு தன் ஆண் மானின் மனத்துன்பத்தை நீக்கி, குட்டியைப் பாலை உண்ணும்படிச் செய்து விட்டு, தன் சுற்றத்தாரிடமும் தன் கலைமானிடமும் தான் வேடனிடம் மாட்டிக் கொண்ட சூழலையும், நபிகள் பெருமான் தனக்காகப் பிணையாக இருக்க இசைந்து தன்னை விடுவித்தமையையும் கூறியது. அதனால் நான் மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்தது. அதைக் கேட்ட கலைமான், “பகைவர் கையில் இருந்து தப்பி வந்த மான் மீண்டும் கொலைப்பட விரும்பி மனிதர்கள் கையில் அகப்படுதல் உண்டோ?” என்று பெண்மானிடம் கூறியது. 
    • இவ்வேண்டுகோளைக் கேட்ட பெண்மான், கலைமானை நோக்கி, “என்னைப் பிணைத்துக் கட்டி வைத்த வேடனின் மனத்தை மாற்றி, தன்னைப் பிணையாகக் கொண்டு என்னை விடுவித்தவர் இறைவன் நபி பெருமான். என் உயிரை வேடனின் பசிக்குத் தந்து நபியினது பிணையை மீட்க நான் மனம் ஒப்பவில்லை என்றால், நான் சுவர்க்கத்தை இழந்து தீய நரகில் புகுவது மட்டுமின்றி வேறு கதியும் பெருமையும் இழக்க வேண்டியிருக்கும். நபிகள் நாயகம் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலியின் வாய்ப்பட்டு இறப்பதே தக்கதாகும். எனவே வாழும் விருப்பததைக் கைவிட வேண்டும். முன்பு ஒருநாள் நதியின் வெள்ளத்தில் மான் பிணையொன்று நடக்க, அதன்பின் நபியும் மற்றவரும் நடந்து சென்றனர். அப்போது அறிவில்லாத ஒருவன் நபிகள் சொல்லைக் கேட்காது மாறி நடந்ததால் நதிக்குள் வீழ்ந்து மடிந்தான். இந்த அதிசயத்தை அறியாதவர் யார்? இவற்றையெல்லாம் அறிந்தும், என்னை இங்கே நிறுத்துதல் நன்மையன்று” என்று கூறிக் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு வேடனிடம் செல்ல எழுந்தது.

மானுடன் கன்றும் செல்ல இசைதல்

    • தன் கூட்டத்தை விட்டு அகன்று செல்ல மான் முற்பட்டபோது கன்றானது முன் வந்து, “உன்னை நீங்கி நான் உயிர் வாழ மாட்டேன். அது சத்தியம்” என்று கூறி பிணையுடன் தானும் செல்ல முடிவு எடுத்தது. அதைக் கண்ட பெண்மானும் இறக்க மனமுவந்து செல்வதால் முடிவில்லாத இன்பம் நமக்கு வந்து சேரும் என்று எண்ணி தன் கன்றோடு காட்டை நோக்கிச் சென்றது.

வேடன் நல்லறிவு பெறல்

    • பெண்மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதைக் கண்ட நபிகள் நாயகம் வேடனை அழைத்து, “ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்” என்று கூறினார். பெண்மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்து “பாவியாகிய எனக்காக வேடனுக்குத் தங்களையே பிணையாக்கினீர். இப்போது மீட்டருள வேண்டும்” என்றுரைத்தது. இதனைக் கேட்ட முகமது நபி அவற்றின் பண்பினைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிணையை விட்டு விட்டு உனது பசியினைச் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக” என்றார். வேடனும், “நான் வீடு பேறு பெற்றேன். வாழ்ந்தேன்” என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்பு, “வேதநாயகரே என்பால் கலிமாவினை ஓதும். நான் வெறும் கானக வேடன். விலங்கை ஒத்தவன். நான் தெளிவடையுமாறு இஸ்லாம் நெறிக்கு உரியவனாக என்னை மாற்றி அருள வேண்டும்” என்று இரு கையாலும் ஏந்தி நின்றி மகிழ்வோடு கூறினான்.
    • முகமது நபிகள் மகிழ்வோடு கலிமா சொல்ல, வேடன் அதனை மனங்கொண்டு ஏற்று இறை நம்பிக்கை வைத்து, அதன்படி நடந்து பெருஞ்செல்வனாகித் தீன் வழியல் நிலையாக நின்றான். மேலும், மானை நோக்கி, “உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைப் போக்கினேன். நீயும் பயத்தை விட்டுக் கன்றுடன் உன் கலைமானிடம் சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக” என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.
  • வேடனின் தோற்றம் குறித்து விவரி.

வேடனின் தோற்றம்

    • வேடன் காட்டடில் திரிகின்ற விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை அறுத்து, கொம்புகளில் வளைத்து, நெருப்பில் சுட்டு உண்டு, தனது உடலை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவன். காலில் செருப்பையும், தனது இடையில் கந்தைத் துணியையும், தோளில் விலங்குகளைப் பிடிக்கின்ற வலையையும், கையில் பெரிய கோதண்டம் எனும் ஆயுதத்தையும், முதுகில் அச்சத்தைத் தருகின்ற கூரிய அம்பினையும், தோளில் வாளாயுதத்தையும் கொண்டு காட்சி அளித்தான். உடல் முழுவதும் வியர்வையோடு மாமிசம் உண்ணப்பட்ட வாயோடு, கொலை வெறி கொண்ட கண்களோடு தோற்றமளித்தான்.
  • மானின் துயர்நிலை குறித்து எடுத்துரைக்க.

மானின் துயர் நிலை

    • தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியிருக்கவும், கண்களில் நீர் பொழிய உடலில் இருந்து பெருமூச்சு வெளிவர, திரும்புவதற்குக் கூட வழியில்லாமல் காலில் கட்டுண்டு கிடந்த மானின் அருகில் நபிகள் சென்றார்.
    • கொடி போன்ற உடம்பிலும், இலையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையையும், அதன் பெருமூச்சையும் கண்ட நபிகள் மானின் அருகே அன்பு சுரக்க நின்றார்.
    • அக்காட்டில் உள்ள மரங்களில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மரங்கள் கண்ணீர் சிந்துவது போல இருந்தது.
    • மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல, பறவைகள் தத்தம் இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
    • பறவைகள் கூட்டுக்குள் புகுந்தபோது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசையானது, “முகமது நபி வருவார். மானை மீட்பார். வருந்த வேண்டாம்” என்று கூறுவது போல இருந்தது.
    • மான் தன் துயர் நிலையை நபிகளிடம் கூறியது
    • காட்டில் வேடனால் கட்டுண்டு கிடந்த மான், தன்னருகில் வந்து நின்ற முகமது நபியை நோக்கி, “இறைவனது உண்மையான தூதரே, என் உயிர் போன்ற சுற்றமும், என் கலைமானும், என் கன்றும் ஒன்றாகத் திரண்டு இந்த மலையின் பக்கத்தில் பயமின்றிப் புல் தரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஓர் இளங்கன்று வேண்டுமென்று விரும்பியும், நான் கருவுறாததால் வருத்தமடைந்தோம். பின் உங்கள் பெயரைப் போற்றி வணங்கியதால் எனக்குக் கரு உருவாகி வளர்ந்தது. எனக்கும் எனது கலைமானுக்கும் ஓர் இளங்கன்று பிறந்தது. நாங்கள் இன்பக்கடலில் மிதந்தோம். இம்மலையின் பக்கம் துன்பமின்றி வாழ்ந்தோம். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. நாங்கள் மலைச்சாரலில் ஒரு நாள் தழையுண்டு பசி தீர்த்து அச்சமின்றி உலவி வந்தோம். நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்த மலை முகட்டில் இருந்து ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்ட நாங்கள் அச்சமடைந்து ஒவ்வொரு திசைக்கும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம். ஒடிய வேகத்தில் நான் என் கலைமானையும், கன்றையும் காணாது வேறு ஒரு காட்டில் புகுந்தேன்.
    • சென்ற திசை தெரியாது நான் புகுந்த காட்டுக்குள் மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குச் சுருக்கிட்டான். புலியிடமிருந்து தப்பிச் சிங்கத்தின் வாயில் சிக்கியது போன்ற நிலையில், நான் மனமுடைந்து ஒடுங்கி நின்றேன். நான் சிக்கியதைக் கண்ட வேடன், “என் பசிக்கு உணவு கிடைத்தது” என்று கூறி என்னுடைய நான்கு கால்களையும் உடம்பினையும் ஒரு கயிற்றால் கட்டினான். என்னை இவ்வனத்திற்குள் கொண்டு வந்து இறக்கினான். நெஞ்சில் கவலை கொண்டு நான் தளர்வுடன் இருக்கும்போது நீங்கள் வருவதைக் கண்களால் கண்டு தளர்ச்சி நீங்கினேன்” என்று தான் வேடனிடம் சிக்குண்ட சூழலை நபிகள் பெருமானிடம் விளக்கிக் கூறியது.
  • இயேசுகாவியம் ஊதாரிப்பிள்ளை குறித்து கட்டுரைக்க. (அல்லது) இயேசுகாவியத்தால் நீ அறிந்த செய்திகளைத் தொகுத்துரைக்க.(அல்லது) ஊதாரிப்பிள்ளை கதையை விளக்குக.

இயேசு காவியம் 

    • இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    • இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு பற்றி குறிப்பிடுகிறது.
    • இந்நூல் பாயிரம், பிறப்பு, தயாரிப்பு, பொதுவாழ்வு, பாடுகள், மகிமை என ஐந்து பாகங்களைக் கொண்டது.

ஊதாரிப்பிள்ளை

தந்தையும் இரு மகன்களும்

    • தந்தை ஒருவர் தன் இரு மகன்களுடன், ஊர் முழுவதும் செல்வாக்குடனும், செல்வத்துடனும் வாழ்ந்து வந்தார். மூத்த மகன் குணத்தில் சிறந்தவனாக, தந்தையின் சொல்லை மதித்து நடந்தான். இளைய மகன் தந்தை சொல்லைக் கேட்காமல் ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிந்தான். ஒருநாள் இளைய மகன் தன் தந்தையிடம் தன் சொத்தைப் பிரித்துத் தருமாறு வற்புறுத்தினான். வேறு வழியின்றி தந்தை சொத்துக்களைப் பிரித்து அவனுக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்தார். தன் பிள்ளையின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். இருப்பினும் இந்தச் செல்வங்களைக் கொண்டு தன் பிள்ளை நன்றாக வாழ்வான் என்று நம்பினார்.

இளைய மகனின் செயல்

    • ஆனால் இளைய மகன் தன் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்று விட்டு, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று மது, மாது என தன் மனம் போன போக்கில் வாழ்ந்தான். பொருள் அனைத்தும் இழந்தான். அந்த நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டு மீள வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். தன் நாட்டைச் சேர்ந்த மனிதர்களைச் சந்தித்து ஒரு வேலை தேடி அலைந்தான். ஒருவன் பன்றிகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்தப் பன்றிகளுக்குக் கொடுக்கும் உணவுதான் அவனுக்கும் கிடைத்தது. அவ்வேளையில் தன் தந்தையின் நினைவால் வாடினான். தன் தவறை உணர்ந்தான். தன் தந்தையைத் தேடிச் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, “என் தந்தையே உனக்கு எதிராக நின்றேன். எத்தனையோ ஊழியர்கள் இங்கே சுகமாக வாழ, அவர்களுள் ஒரு ஊழியனாக நான் இங்கேயே இருக்கின்றேன். உன் கூலிகளில் ஒருவனாக என்னை ஏற்பாய். ஏனெனில் உன் பிள்ளை என்று சொல்ல எனக்குத் தகுதியில்லை” என்று கூற வேண்டும் என்று எண்ணியவனாகத் தன் தந்தையிடம் சென்றான்.

மனம் திருந்திய இளைய மகன்

    • தன் மகன் எப்போதாவது திருந்தி தம்மிடமே வந்து விடுவான் என்று காத்திருந்த தந்தை, தன் மகனைக் கண்டதும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “நீ எப்போது வருவாய் என்றுதான் நான் காத்திருந்தேன். இப்படி இளைத்திருக்கிறாயே” என்று கூறித் தன் மகனைத் தேற்றினார். மேலும் “நீ தப்பான பிள்ளையல்ல. காலம் செய்த சதி இது. ஆகவே வருந்தாதே” என்று கூறினார். பின்பு, “யாரங்கே பணியாட்களே! பட்டாடை நகைகள், அலங்கார வகைகள் யாவற்றையும் கொண்டு வந்து இவனுக்கு அணிவியுங்கள்” என்று ஆணையிட்டார். தன் மகனுக்கு கன்றின் கறிகளுடன் விருந்து படையுங்கள் என்று கூறினார். அன்று மாலை மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடே நடனங்களும் பாடல்களுமாக விழாக்கோலம் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தான். தன் பணியாட்களிடம் கேட்க, அவர்கள், “தங்கள் தம்பி திரும்ப வந்துள்ளார். அவனின் வரவை உங்கள் தந்தை கொண்டாடுகின்றார்” என்று கூறினர். அதைக் கேட்ட மகன் மிகுந்த கோபம் கொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றான். தன்னைத் தேடி வந்த தந்தையிடம், “சாத்திரங்களை மறந்தவனுக்குத் தடபுடலாக வரவேற்பு கொடுக்கின்றீர். உங்களுடன் இருந்தவரை இதுபோன்று எனக்காக எந்த விருந்தும், விழாவும் நீங்கள் கொண்டாடியதில்லை” என்று கண்கலங்கிக் கூறினான். அதற்குத் தந்தை, “மகனே! நீ எப்போதும் என்னுடன் இருப்பவன். என் செல்வம் யாவும் எப்போதும் உனக்கே உரிமையாகும். உன் தம்பி இறந்து இப்போது உயிர் பெற்று வந்திருக்கின்றான். அவன் மறுபிறவி எடுத்ததற்காகவே இந்த ஏற்பாடுகள்” என்று கூறி சமாதானம் செய்கின்றார்.
wpChatIcon
error: Content is protected !!