இரண்டாம் பருவம் – அலகு-3 பாடக்குறிப்புகள்

அலகு- 3: இக்கால இலக்கியம் -I

1. பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதியார்

பாரதியார் குறிப்பு

  • இயற்பெயர்: சுப்பிரமணியன்.

  • பெற்றோர்: சின்னச்சாமி ஐயர் – இலக்குமி அம்மாள்.

  • காலம்: 11.12.1882 – 11.09.1921.

  • அறிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி.

  • முப்பெரும் படைப்புகள் : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

  • பிற படைப்புகள்: பாப்பா பாட்டு, பகவத் கீதை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை, ஞான ரதம், தேசிய கீதங்கள்.

  • புனைப்பெயர்கள்: காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஷெல்லிதாசன்.

  • சிறப்பு பெயர்கள்: மகாகவி, மக்கள் கவிஞர், தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, முண்டாசுக் கவிஞன்.

  • பாரதியின் வாழ்த்து: பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பொதுவுடைமைக் கொள்கை குறித்து விளக்குகின்றார். பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ என்று வாழ்த்துகின்றார், மேலும் சமுதாயம் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்பதை அறிவிக்க “ஜய ஜய” என்று இசை பாடி மகிழ்கின்றார்.

  • பொதுவுடைமைக் கொள்கை: தான் வாழ்ந்த காலத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என விரும்பினார். அக்கொள்கையைப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாகவும், உலகத்திற்குப் புதுமையான சமுதாயமாகவும் விளங்கும் என்று கூறுகின்றார்.

    • இக்கொள்கையைப் பின்பற்றினால், ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் பறிக்கும் வழக்கம் இருக்காது.

    • ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் தான் மட்டும் சுகமாக வாழும் பழக்கம் இருக்காது.

  • இயற்கை வளம் நிறைந்த நாடு: இனிமையான சோலைகளாலும், நெடிய வயல்களாலும் சூழப்பட்ட பாரத நாட்டில் கனியும், கிழங்கும், தானியங்களும் கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இருக்கத் தேவையில்லை.

  • புதிய கொள்கை: “தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம்” என்று சினமுடன் உரைக்கின்றார்.

  • சமத்துவம்: “எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்” என்பது இறைத் தத்துவம். ஆகையால் சாதி, இனம், மதம் என்ற கட்டுக்களை அறுத்தெறிய வேண்டும் என்பது பாரதியின் கனவு.

  • வேற்றுமையில் ஒற்றுமை: மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா உலகிற்கே கற்றுக் கொடுக்கும். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு.

  • சமதர்மக் கொள்கை: சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும், இங்கு வாழும் மக்கள் அனைவரும்:

    • ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களே! ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களே! எல்லோரும் ஒரு எடை கொண்டவர்களே!.

    • அனைவருக்கும் ஒரு விலையே!.

  • எல்லோரும் இந்நாட்டு மன்னர்: இந்திய நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்றும், சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் சூளுரைக்கின்றார்.

2. சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்

பாரதிதாசன் குறிப்பு

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்.

  • பெற்றோர்: கனகசபை- லட்சுமியம்மாள்.

  • காலம்: 29.04.1891-21.04.1964.

  • படைப்புகள்: அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், பிசிராந்தையார், தமிழச்சியின் கத்தி.

  • விருதுகள்: 1946 இல் புரட்சிக்கவி என்ற பட்டம் பெற்றார். 1968 இல் பிசிராந்தையார் என்ற நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • சிறுத்தையே வெளியில் வா (வலியுறுத்தல்): தமிழரின் உரிமை காக்க, தமிழ் மொழியை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் வலியுறுத்துகின்றார்.

  • செயல் செய்ய புறப்படு: அடிமைத்தளத்தில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. சிறுத்தை போன்ற இளைஞர்களே வெளியே வாருங்கள்! எலி என இகழ்ந்தவர்களுக்கு முன்பாக, புலி என காட்டிட செயல் வீரர்களாகப் புறப்படுங்கள்!

  • நள்ளிரவை பகல் என நம்பியது போதும். பறவை போல சிறகை விரித்து உயர பறக்க முயற்சி செய்யுங்கள்! சிங்கம் போன்ற இளைஞர்களே, தாய்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உங்கள் சிந்தனைகளைச் செயல்படுத்துங்கள்!

  • விழித்தெழு தமிழா: தாய்நாட்டைக் கழுதை போன்ற சிந்தனை கொண்டவர்கள் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. வெறும் கையை ஏந்தி வந்த கயவர்கள் பொய்களை உரைத்து, தமிழ் மொழிக்குத் தடை விதித்து நாட்டைக் கைப்பற்றி விட்டனர். நம் உரிமைகளைப் பறித்து, அவற்றை அவர்களுடையது என்று கூறுகின்றனர். காலங்காலமாக வீரத்துடன் வாழ்ந்த நாம் இதைக் கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது; மொழிப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டு விழித்தெழுங்கள்!

  • தாய்மொழிக்கு புதுமை சேர்ப்போம்: மானத்திற்கு அஞ்சி வாழ்ந்த தமிழினம், புகழ்ச்சியை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும். வலிமை மிகுந்த மரபில் வந்த இளைஞர்களே, உங்கள் கைகளின் செயல்திறனைக் காட்ட வாருங்கள்! உயர்ந்த குறிக்கோள்கள் நிறைந்த இளைஞர் கூட்டத்தைக் கூட்டுங்கள்! கடல் போல பகை வளர்ந்துள்ளது. ஆகவே, தாய்மொழிக்கு விடுதலை தரவும், தமிழ் மொழிக்குப் புதுமை சேர்க்கவும் மக்களை ஒன்று சேர்த்து தமிழர்களின் வாழ்வை உயர்த்திடுங்கள்!

3. கத்தியின்றி ரத்தமின்றி – நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் குறிப்பு

  • இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை.

  • பெற்றோர்: வெங்கடராமன் பிள்ளை – அம்மணியம்மாள்.

  • பிறந்த ஊர்: நாமக்கல் மாவட்டம் – மோகனூர்.

  • காலம்: 19.10.1888-24.08.1972.

  • சிறப்பு பெயர்: காந்தியக் கவிஞர்.

  • சிறப்பு பெற்ற பாடல் வரிகள்: “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”.

  • படைப்புகள்: மலைக்கள்ளன், அவளும் அவனும், என் கதை (தன் வரலாறு), காந்தி அஞ்சலி, வள்ளுவரின் உள்ளம்.

  • நோக்கம்: நாமக்கல் கவிஞர் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அகிம்சை நெறியில் தேசத்திற்காகப் போராட வருமாறு மக்களை அழைக்கின்றார்.

  • புதுமையான போர்: கத்தியும் இல்லாமல் இரத்தமும் இல்லாமல் ஒரு யுத்தம் நடைபெறுகின்றது. உண்மையான வழியில் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்ற யாவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். ஒளிந்து கொண்டு பகைவர் மீது குண்டு எறிந்து கொல்லும் விருப்பம் இல்லாத இந்தப் போராட்டத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

  • எதிரியென்று யாருமில்லை: இந்தப் போராட்டத்தில் பகைவர்களை அழிக்கக் குதிரைப்படை, யானைப்படை இல்லை. உயிர்களைக் கொல்லும் விருப்பம் இல்லை. எதிரி என்று யாரையும் எண்ணுவதில்லை. யார் மீதும் கோபம் இல்லை, அவர்களை வென்றாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை.

  • தனக்குத் துன்பத்தையே கொடுத்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது சாபம் இடுவதில்லை. பாவத்தின் செய்கைகளை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை.

  • தெய்வ மார்க்கம்: இப்படி ஒரு மாறுபட்ட போரை யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாது. முன்பு செய்த புண்ணியத்தால் சாந்தம் நிறைந்த காந்தி என்ற மகானை இத்தேசத்தில் பெற்றிருக்கின்றோம். அவர் காட்டுகின்ற அகிம்சையின் செம்மையான வழியில், மனிதர் எவருக்கும் தீங்கு நேராத முறையில் நடைபெறுகின்ற இந்தப் போரில் கலந்து கொள்ளுமாறு தேச மக்களை அழைக்கின்றார்.

4. மீன்கள் – தமிழ்ஒளி

தமிழ்ஒளி குறிப்பு

  • இயற்பெயர்: விஜயரங்கம்.

  • காலம்: 21.09.1924 – 29.03.1965.

  • புனைப்பெயர்கள்: தமிழ் ஒளி, விஜயரங்கம், விஜயன், சி. வி. ர..

  • நூல்கள்: கவிஞனின் காதல், வீராயி, மே தின ரோசா, விதியே வீடியோ, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம்.

  • வான்கடல் முத்துக்கள்: ஏழைகள் வாழும் ஓட்டை விழுந்த குடிசையானது விண்ணை நோக்கி நீண்டிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களோ? அல்லது, இம்மாநிலத்தில் உழைப்பவர்களின் உடலில் உண்டான தழும்புகளோ? என்று கவிஞர் வினவுகிறார்.

  • பெண்களின் சோக உணர்ச்சி சிதறல்கள்: செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களின் கண்களெல்லாம் குடிசையில் உள்ள பொத்தலை நோக்கியே துடித்தபடி கிடக்கின்றனவா? சொந்தமாய் உரிமையை இழந்திருக்கக்கூடிய பெண்கள் என்பது சோக உணர்ச்சியின் சிதறல்கள் தானோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • கண்களோ விண்மீன்கள்: இரவுதான் வறுமையில் வாடுவோர்க்கான கந்தல் உடை என்றால் அவற்றைக் காணும் கண்களா விண்மீன்கள்? வான்குன்றிலிருந்து சிதறும் நீர் துளிகளா அருந்தக் கூ கூட இல்லாத மக்களின் கண்ணீர்? எனப் பசியில் வாடுவோரின் துயரைப் பேசியுள்ளார்.

  • காலம் எழுதும் எழுத்துக்கள்: பிச்சைக்காரரது உள்ளத்தின் ஏக்கங்கள் காலத்தால் எழுதப்பட்ட எழுத்துக்களோ என்று வருத்தத்துடன் பாடுகிறார்.

  • தொழிலாளர்களின் எண்ணங்கள்: வெய்யில் போன்று சுடக்கூடிய கொடிய அரசாங்கம் வாட்டினாலும், வேலிகட்டி அடைத்து வைத்திருந்தாலும், பொய்யாக வாழாத தொழிலாளரின் எண்ணங்களெல்லாம் அங்கே பொங்கி குமுறி இறைத்த ஒன்றுதானோ என்கிறார். நீலக்கடலில் இறைக்கப்படும் மின்னலைப் போல், அரசாங்கம் உதவிடும் என நம்பும் தொழிலாளரது எண்ணமும் இருக்கிறது என அவர்களின் வேதனையைக் கவிஞர் தமிழ்ஒளி பாடியுள்ளார்.

5. எட்டாவது சீர் – ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் குறிப்பு

  • இயற்பெயர்: ந. செகதீசன்.

  • பெற்றோர்: செ. இரா. நடராசன் – வள்ளியம்மாள்.

  • காலம்: 28.09.1933.

  • விருது: கலைமாமணி.

  • நூல் விருது:வணக்கம் வள்ளுவ” என்ற நூல் 2004 இல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

  • எழுதிய நூல்கள்: தமிழன்பன் கவிதைகள், சிலிர்ப்புகள், தோணிகள் வருகின்றன, ஊமை வெயில்.

  • மையக் கருத்து: உலகின் முக்கியமான சில நிகழ்வுகள் ஏழு என்ற எண்ணுடன் நிறைவு பெறுகின்றது. ஏன் எட்டாம் எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வினாவை மையப்படுத்தி இக்கவிதையைப் படைத்துள்ளார். திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஏழு சீர்களையே பயன்படுத்தியிருப்பது கண்டு, எட்டாவது சீருக்கு அவர் ஏன் இடமளிக்க மறுத்துவிட்டார் என்பதையும் ஆராய்கின்றார்.

  • இசையின் சுரங்கள் ஏழு: எட்டாவது சுரம் அனுமதிக்கப்படாததால், இசை ஒரு வரைமுறைக்குள் அடங்காதவை என்பதை உணர்த்தி, இசையின் தேவதை கதவைத் திறக்க ஓடியிருக்கலாம்.

  • வானவில்லின் நிறம் ஏழு: எட்டாவது வண்ணத்திற்கு இடமில்லை என்பதால், வானம் நிறங்கள் நீங்கிய இரவில் தன் வண்ணங்களைக் காணவில்லை என்று அழுதிருக்கலாம்.

  • வாரத்தின் நாட்கள் ஏழு: எட்டாவது கிழமைக்கு வாரத்தின் கால எல்லைக்குள் இடமில்லை. ஒருவேளை இருந்திருந்தால் காலத்தின் அளவு கூடி மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்கும்.

  • வள்ளுவத்தின் சீர் ஏழு: எட்டாவது சீர் வள்ளுவரைத் தேடிப் போனபோது, வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை விரட்டுவது போல வள்ளுவர் விரட்டியிருக்கலாம்.

  • யாப்பின் கட்டமைப்புகள்: யாப்புக் கட்டமைப்புகள் எட்டாவது சீருக்கு இடம் தர முடியாது என்று மிரட்டியிருக்கலாம்.

  • அலகிடும் வாய்ப்பாடுகள்: காசு, பிறப்பு, நாள், மலர் ஆகியவை எட்டாவது சீர் வந்தால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று நச்சரித்திருக்கலாம்.

  • வள்ளுவரின் கேள்வி: ஏழு சீர்களில் சொன்னதையே நாம் பின்பற்றுவதில்லை. பிறகு ஏதற்கு எட்டாவது சீர்க் கவலை என்று வள்ளுவர் கேட்பது காதில் விழுகின்றது.

  • இலக்கணத்தின் ஆர்வம்: இலக்கணத்தின் மீது ஆர்வம் உடையவன், “எட்டாவது சீருக்கு இடம் தந்திருந்தால் இன்னும் ஏதேனும் செய்தி கிடைத்திருக்குமே” என்று ஏங்குகின்றான்.

  • எட்டாவது சீர் யார்?: உண்மையின் உள்ளத்தில் இருந்து பேசுபவர் எவரோ அவரே வள்ளுவர் எழுதாமல் விட்ட எட்டாவது சீர் என்று தோன்றுகின்றது.

6. கடிதம் – புதுமைப்பித்தன்

  • கதை மாந்தர்: சிங்கார வேலு (இலக்கியக் கர்த்தா), சுந்தரம் (சிங்கார வேலுவின் நண்பர்), நாகப்பன் (கடிதம் எழுதியவர்).

  • சிங்கார வேலுவின் சிறுகதைகள்: இவை “வாழ்க்கையின் இலட்சியங்களையும் சிக்கல்களையும் திறந்து காட்டும் ஜன்னல்களாக” கருதப்படுகின்றன.

  • எழுத்தின் நோக்கம்: அவர் பணத்திற்காக எழுதவில்லை, மாறாக தன்னை வெளிப்படுத்தவே எழுதுகிறார்.

  • புகழின் தேவை: ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கு “நேர்மையான புகழ்” தேவை என்று அவர் நம்புகிறார்; அந்தப் புகழ் “ஊக்கமளிக்கும் உணவு” போன்றது.

  • மனநிலை: உண்மையான பாராட்டு இல்லாததால் அவர் சிரமப்படுகிறார். சமூகத்திற்கு அழகு என்றால் என்னவென்று தெரியவில்லை அல்லது பாராட்டத் தைரியம் இல்லை என்று உணர்கிறார்.

  • படைப்புத் தடை: ஊக்கமின்மையால், சிங்கார வேலு படைப்புத் தடையை அனுபவிக்கிறார்; ஒரு கதையை ஏழு நாட்களாகத் தொடர முடியாமல் விரக்தியடைகிறார். நண்பர் சுந்தரம் பாராட்டியதைக் கூட நட்பின் காரணமாக வந்ததாகப் புறக்கணிக்கிறார்.

  • நாகப்பனின் கடிதம்: ஐந்தாறு நாட்கள் கழித்து, விசாகப்பட்டினத்திலிருந்து (10.9.33 அன்று) நாகப்பன் என்ற அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து கடிதம் வருகிறது.

  • கடிதத்தின் பாராட்டு: அந்தக் கடிதம் சிங்கார வேலுவின் ‘சாலாவின் சங்கடங்கள்’ என்ற கதையை, “வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியம்” என்றும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்திலேயே இணையற்றது என்றும் புகழ்ந்து பேசுகிறது.

  • ஆரம்ப மகிழ்ச்சி: கடிதத்தைப் படித்ததும், சிங்கார வேலுவின் முகம் மலர்ச்சி அடைகிறது, உள்ளம் பூரிப்படைகிறது. இது தனது “பெரிய தாபத்தைத் தீர்த்து” சமூகத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுத்ததாக அவர் உணர்கிறார்.

  • சந்தேகம் மற்றும் கோபம்: கடிதத்தில் உள்ள சில எழுத்துக்கள் தனக்குத் தெரிந்தவரின் கையெழுத்துப் போல் இருப்பதால், இதைச் சுந்தரம் செய்த குறும்புத்தனமான செயல் என்று சந்தேகிக்கிறார். இந்தக் “கோழைத்தனமான செயல்” குறித்து ஆரம்ப மகிழ்ச்சி கடும் கோபமாக மாறுகிறது.

  • சமூகத்தின் மீதான விமர்சனம்: அவர் சமூகத்தை “முட்டாள்கள்,” “கோழைகள்,” மற்றும் “தரித்திரக் கழுதைகள்” என்று திட்டுகிறார். அத்தகைய “முட்டாள் கூட்டத்திற்கு” கதை எழுதுவதை விட “கசையடி கொடுப்பேன்” என்று அறிவிக்கிறார்.

  • முடிவு: அறையெங்கும் காகிதம் எரியும் நாற்றம் பரவுகிறது. அவர் இருளில் அமர்ந்தபடி, “அசட்டுத்தனமான சமூகத்தை” எப்படி உயர்த்துவது என்றும், கோழைத்தனத்தை மாற்றியமைத்து “புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி” என்றும் சிந்திக்கிறார். “ஒளி” (நம்பிக்கை அல்லது மாற்றம்) வரும்போது, தான் இருக்க வேண்டிய அவசியமில்லை, தனது சிருஷ்டிகள் இருந்தால் போதும் என்றும் சிந்திக்கிறார்.

7. வாய்ச்சொற்கள் – ஜெயகாந்தன்

  • கதை மாந்தர்: ருக்குமணி (பிறவிக் குருடான பெண்), கண்ணப்பன் (பார்வையை இழந்த இளைஞன்).

  • ருக்குமணியின் நிலை: அவள் கிராமத்தின் எல்லையில் உள்ள பாழடைந்த சத்திரத்தில் தனிமையில் வாழ்கிறாள் (தாத்தா செங்கேணி இறந்த பிறகு).

  • தொழில்: கண்பார்வை இல்லையென்றாலும், கூடை முடைதல், தடுக்கு பின்னுதல் போன்ற கைவினைத் தொழில்களைச் செய்து பிழைக்கிறாள்.

  • உணர்வுத் திறன்: அவளது விரல்கள், காதுகள், நாக்கு என உடல் முழுவதும் “கண்கள்” இருப்பதாகக் கூறப்படுகிறது, இது அவளது கூர்மையான உணர்வுத் திறன்களைக் குறிக்கிறது.

  • கண்ணப்பன்: விழுப்புரத்திலிருந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் வந்து இறக்கிவிடப்பட்டவன். அவனும் நான்கு வருடங்களுக்கு முன் அம்மை வார்த்து கண்பார்வையை இழந்தவன்.

  • முதல் சந்திப்பு: கண்ணப்பனின் “ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே” என்ற பாட்டைக் கேட்டு ருக்குமணி மிகவும் கவரப்படுகிறாள். அவள் அவனுக்கு வேர்க்கடலையும், புல்லாங்குழல் செய்ய உதவும் நல்ல மூங்கில் கம்பையும் கொடுக்கிறாள்.

  • பிரிவு மற்றும் மீள்வருகை: மறுநாள் கண்ணப்பன் சொல்லாமல் சென்றுவிடுகிறான். ஒரு வாரம் கழித்து, ருக்குமணி கொடுத்த மூங்கிலால் புல்லாங்குழல் செய்து, குழந்தைகள் ஊதும் ஊதல் போன்ற கருவிகளைச் செய்யும் புதிய தொழிலைத் தொடங்கிவிட்டு, புல்லாங்குழல் இசைத்தபடி திரும்ப வருகிறான்.

  • உணர்ச்சி வெளிப்பாடு: ருக்குமணி தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அவனது பாட்டையும், பேச்சையும், அவனையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறாள்.

  • திருமணத் தயக்கம்: இரண்டு பார்வையற்றவர்கள் எப்படி வாழ முடியும் என்றும், தானும் அவளுக்குச் சுமையாகிவிடுவேன் என்றும் நினைத்துத்தான் சொல்லாமல் சென்றதாகக் கண்ணப்பன் கூறுகிறான்.

  • பார்வையற்ற நிலை: ருக்குமணி தனது பார்வையற்ற நிலை ஒரு குறைபாடு அல்ல என்று கூறி, “கண்ணுன்னா என்னா?” என்று கேட்கிறாள்.

  • கண்ணப்பனின் பார்வை: கண்ணப்பன் உணர்ச்சிவசப்பட்டு, “நீதான் எனக்குக் கண்ணு இனிமேலே” என்று அவளைத் தன் கண்களாகக் கருதுகிறான்.

  • வாய்ச்சொற்களின் முக்கியத்துவம்: வள்ளுவரின் கூற்றான “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல” என்பதற்கு மாறாக, இந்த உறவுக்கு வாய்ச்சொற்களே முக்கியம் என்பதைக் கதை உணர்த்துகிறது.

8. அந்நியர்கள் – சூடாமணி

  • கதை மாந்தர்: ஸவிதா (அக்கா), சௌம்யா (தங்கை).

  • சந்திப்பு: பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, தாயின் மரணத்துக்குப் பின் சந்திக்கின்றனர். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சௌம்யாவை, அவரது கணவர் பம்பாயிலிருந்து அக்காவிடம் அனுப்பிவைக்கிறார்.

  • ஆரம்ப ஒற்றுமை: ஆரம்பத்தில், பிரிந்திருந்த காலம் கரைந்துவிட்டதைப் போல உணர்கிறார்கள். காபியில் ஒரே அளவு இனிப்பு, அகலக் கரை போட்ட புடைவைகள், விடியற்காலை நடைப்பயிற்சி, வற்றல் சாப்பிடும் பழக்கம் போன்ற பல சின்னச் சின்ன ஒத்த ரசனைகள் அவர்களிடம் இருந்தன.

  • வேறுபாடுகள் வெளிப்படல்: நாளடைவில், இருவரின் கருத்துக்களிலும், உலக கண்ணோட்டத்திலும் வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின.

வேறுபாடுகள்

ஸவிதா (அக்கா)

சௌம்யா (தங்கை)

குழந்தை வளர்ப்பு

காலம் மாறுகிறது என்றும், பிள்ளைகள் உலகத்தின் யதார்த்தங்களைத் தெரிந்துகொண்டு வாழ வேண்டும் என்றும் கூறுகிறாள்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே தங்கினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள் என அஞ்சுகிறாள்.

கலை/இலக்கியம்

நவீன படைப்புகளில் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் ரசிக்க வேண்டும் என்று வாதிடுகிறாள்.

நவீன திரைப்படங்களையும் இலக்கியத்தையும் “பச்சைத்தனம்” கொண்டவை என்று விமர்சிக்கிறாள்.

எழுத்து லட்சியம்

சௌம்யாவின் எழுத்தை “நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி” இருப்பதாகக் கூறுகிறாள்.

ஆபாசமும் பயங்கரமும் நிறைந்த உலகில், தனது எழுத்தில் நல்லதையும் தூய்மையையும் காட்டுவதே தனது லட்சியம்.

பொதுச் சேவை

தனிநபரின் உதவி “போட்டவரைக்கும் பிரயோசனம்” என்று பத்துப் ரூபாய் கொடுத்து உதவுகிறாள்.

வறுமை ஒரு அடியில்லாத பள்ளம் என்றும், தனிநபர்களின் உதவி பயனற்றது என்றும், நிறுவன அளவிலான தீர்வுகள் தேவை என்றும் கருதுகிறாள்.

நினைவுச் சின்னங்கள்

பெற்றோரின் கண்ணாடி ஜாடியைப் பொக்கிஷமாகக் காப்பாற்றுகிறாள்.

தனது பங்கைப் பார்த்த ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்துவிட்டாள். “அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?” என்று கேட்கிறாள்.

தெய்வ நம்பிக்கை

அவள் வீட்டில் பூஜை அறை இல்லை. “மனதிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?” என்று தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாள்.

தெய்வ நம்பிக்கையின்றி வாழ முடியாது என்று கூறுகிறாள்.

  • உறவின் நிலை: இந்த வேறுபாடுகளால் அவர்களுக்குள் ஒரு “கவன உணர்வு” மற்றும் “தயக்கம்” உருவாகிறது.

  • முடிவு: பிரிந்து வந்த பின்னரும், ஒருவரையொருவர் “ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது” என்று ஸவிதா உணர்கிறாள். இந்த வேறுபாடுகள் அனைத்தையும் கடந்தும், அவர்களின் அன்பு ஒரு ஆழமான பிணைப்பாக, உள்ளுயிர்ப்பாக (அடியிழை) தொடர்ந்து நீடிக்கிறது.

9. தம்பிக்கு – மு.வரதராசனார் (முதல் கடிதம்)

  • நூல் வடிவம்: டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் தம்பிக்கு என்ற நூலில், வளவன் என்னும் அண்ணன் தன் தம்பி எழிலுக்கு எழுதுவதுபோல பல கடிதங்களை எழுதியுள்ளார்.

  • நோக்கம்: அக்கடிதங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் இளைஞர்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

  • நன்மை – வன்மை: நன்மை, வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு. நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் துன்புற்று வீழ்கின்றனர். வல்லமை மட்டும் பெற்றவர்கள் எதிர்பாராத வகையில் அழிந்து போகின்றனர்.

  • தமிழர்கள் நிலை: தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், நாடு நாடாகவும் அழிந்தது போதும். இனி வல்லவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • உடல் – உள்ளம்: உடலை மட்டும் போற்றினால், உள்ளம் பகைத்து அழிக்கும். உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றினால், உடல் நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அமைதியைக் கெடுக்கும். எனவே, உடல், உள்ளம் இரண்டையும் வலிமையாகவும், தூய்மையாகவும் காப்பதே கடமையாகும்.

  • அறநெறி – பொருள்நெறி: வாழ்க்கையில் அறநெறியும் வேண்டும், பொருள் நெறியும் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பது வள்ளுவர் கருத்து.

  • தமிழ்மொழி – வன்மை மொழி: நல்ல மொழியான தமிழை நாம் வன்மை பொருந்திய மொழியாக ஆக்கவில்லை. தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு அளிக்கவில்லை. நீதிமன்றங்களில் உரிமை தரவில்லை. ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கவில்லை. வல்லமை இல்லாத நன்மை என்றும் வாழாது.

  • பொதுமக்கள் – களிமண்: பொதுமக்கள் தங்களின் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணித் தங்கள் தேவையை உணரத் தெரியாத களிமண்ணாக பரந்து விரிந்து இருக்கின்றனர். அதனால் யார் யாரோ அவர்களைப் பிசைந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவங்களைச் செய்து கொள்கின்றனர்.

  • கடமை – மேடைப் பேச்சு: ஒன்றும் செய்யாமல் தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்து விடும் என்று எண்ணிக் கொண்டு காலம் கழிப்பது குற்றம். மேடையில் வீறு கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டால், கடமைகளை எண்ணிப் பார்க்க வாய்ப்பு உண்டாகும். மேடையின் மகிழ்ச்சி கடமையை மறக்கச் செய்கின்றது.

  • முடிவுரை (முதல் கடிதம்): இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார்போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்காதவாறு காப்பாற்ற வேண்டியது இளைஞர்களாகிய நம் பொறுப்பு என்று அறிவுறுத்துகின்றார்.

1௦. தம்பிக்கு – மு.வரதராசனார் (இரண்டாம் கடிதம்)

  • நோக்கம்: மேடைப்பேச்சு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நம்மை சோம்பேறிகளாக்குகின்றது. உணரச்சிக் கொந்தளிப்பால் வீரமான வசனங்களைப் பேசுவது வீணான காரியம் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார்.

  • வீண் கனவு அல்ல: திருக்குறள் ஓதியே திருமணம் நடைபெற வேண்டும், கோயில்களில் தமிழ்மறைகள் ஓத வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், ஆளுநர் தமிழில் கையொப்பம் இட வேண்டும் ஆகியவை வீண் கனவு அல்ல. தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் இவற்றை வீண் கனவு என்று குறிப்பிடுவான்.

  • தமிழரின் கடமை: தமிழரின் திருமணங்களில் திருக்குறள் ஓதுவது கனவு அல்ல; அது தமிழரின் கடமை. கோயில்களில் தமிழ் மறை ஓதுவது கனவு அல்ல; சான்றோர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கும் கடமை. அதிகாரிகளும், ஆளுநரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்பது கனவு அல்ல; அது வங்காளத்தில் தொண்டு செய்யச் சென்றபோது வங்காளி எழுத்தைக் கற்றுக் கொண்ட காந்தியடிகளின் நெறி.

  • தமிழரின் குறை: பிறருடைய சொல்லுக்கு மயங்குவது தமிழரின் மிகப் பெருங் குறையாக இருக்கின்றது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டு, தமிழரை ஏமாற்றுகின்றனர்.

  • தமிழர் நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து பண்பட்டு வந்தது. அதனால் சொல்பவர் யார், உண்மையாக சொல்கிறாரா என்று ஆராய்ந்து பார்க்காமல் நம்பி உணர்ந்து வாழத் தொடங்கிவிடுவர். இதனால், “தமிழர்களே தமிழர்களை அழித்துக் கொள்வார்கள்” என்று பகைவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

  • மொழிப்பற்று: மொழியால் இனம் அமைவதும், நாகரிகம் அமைவதும், நாடு அமைவதும், நாட்டின் அமைப்புக்குத் துணையாக இருப்பதும் உலகம் அறிந்த உண்மைகள். இவற்றை எல்லாம் பொய் என்று உபதேசம் செய்கிறவர்கள் நம்மைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவர்கள்.

  • தற்காப்பு உணர்ச்சி: உலகம் ஒரு குடும்பமாய் அன்பாய் வாழக் கற்றுக் கொள்ளும் வரையில், தமிழனுக்குத் தற்காப்பு உணர்ச்சி கட்டாயம் வேண்டும். தமிழர்களைக் கடமைப்பற்று உடைய செயல் வீரர்களாக ஆக்க வேண்டும்.

  • முடிவுரை (இரண்டாம் கடிதம்): இன்று தமிழர்க்கு வேண்டியது அன்றாட கடமையைப் பற்றிய ஆராய்ச்சியே. மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் செயலில் காட்ட முனைவதே சிறப்பு என்று அறிவுறுத்துகின்றார் மு.வரதராசனார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!