நகரம்

நதிகளை ஒழித்து

நன்மரங்களை அழித்து

நல்சுவாசம் தொலைத்து

நச்சுக்காற்றால் பிணித்து

வாழும் நாள் குறைத்து

வீழும்நாள் குறித்து

நமக்கு நாமே உருவாக்கிய

நரகம் நகரம்!

நாளைய இந்தியா

அந்நிய நாட்டில் அடிமையைப் போல்

ஆணிவேரற்ற மரங்களாய்

இன்பம் இழந்து

ஊதியத்திற்காய் வாழும் 

நிலை ஒழிந்து 

இளைஞர் அறிவு

இணையற்ற சக்தியாய் உருவெடுக்க

உலகம் போற்றிடும்

உன்னத பூமியாய் 

நமக்காய் மலரட்டும்! 

நாளைய இந்தியா!

வகுப்பறை

 

வருடம் ஒருமுறை புதிதாய் பிறந்திடும்

வசந்தகால மலர்களாய் நட்பு மலர்ந்திடும்

வன்மை குணங்கள் அனைத்தையும் அழித்து

வளமான வாழ்க்கையை வரமாய் தந்திடும்

தன்னைநாடி வருவோர்க்கு வற்றாத ஊற்றாய்

வாரி வழங்கிடும் வள்ளல்தான் வகுப்பறை!

உன்னால் முடியும்

விண்ணையும் வில்லாய் வளைக்கலாம்

மண்ணையும் பொன்னாய் மாற்றலாம்

கடலையும் கால்களால் கடக்கலாம்

காற்றையும் கைகளால் பிடிக்கலாம்

காலத்தைக் கணக்காய் பயன்படுத்தி

முயன்றால் எதுவும் உன்னால் முடியும்!

ரௌத்திரம் பழகு

அன்னைமொழி புகழ் அகிலம் பரவிட

அதிகாரவர்க்கம் கதிகலங்கி அரண்டு புரண்டிட

ஆங்கில மோகம் அடங்கி ஒடுங்கிட

உழவுத்தொழில் உயர்வை மனிதகுலம் உணர்ந்திட

உழவரின் உழைப்பை உலகம் போற்றிட

ஊழல் மறைந்து உழைப்பு பெருகிட

கையூட்டு பெறுபவர் கைகள் நடுங்கிட

சண்டைகள் குறைந்து சமாதானம் நிலவிட

சாதிகள் அழிந்து சழக்குகள் மறைந்திட

தமிழனின் பெருமை தரணி அறிந்திட

மனிதநேயம் மனிதர் மனங்களில் நிறைந்திட

மனிதனை மனிதன் மனிதனாய் மதித்திட

மனிதா தமிழா ரௌத்திரம் பழகிடு!

பாரதி

இவர் பார்போற்றும் ரதி, பாரதத்தின் அதிபதி

இந்திய விடுதலைப் போரின் தேர்ச்சாரதி

இவர் பிறந்த தமிழகமோ சிறந்த பதி

நாம் இவரை இழந்தது விதியின் சதி!

wpChatIcon
error: Content is protected !!