உன்னால் முடியும்

விண்ணையும் வில்லாய் வளைக்கலாம்

மண்ணையும் பொன்னாய் மாற்றலாம்

கடலையும் கால்களால் கடக்கலாம்

காற்றையும் கைகளால் பிடிக்கலாம்

காலத்தைக் கணக்காய் பயன்படுத்தி

முயன்றால் எதுவும் உன்னால் முடியும்!

தண்ணீர்

மரங்களை அழித்ததால்

மழை மறைந்து

மண்ணின்வளம் குறைந்து

மறுபடியும் உருவெடுத்தது தண்ணீர்

மனிதர் கண்களில் கண்ணீராய்!

மழை

குளமாய் தேங்கி

ஆறாய் ஓடி

கடலாய் மாறி

வீசும் காற்றால்

விண்ணில் கருகொண்டு

மண்ணில் தவழும் குழந்தை!

ரௌத்திரம் பழகு

அன்னைமொழி புகழ் அகிலம் பரவிட

அதிகாரவர்க்கம் கதிகலங்கி அரண்டு புரண்டிட

ஆங்கில மோகம் அடங்கி ஒடுங்கிட

உழவுத்தொழில் உயர்வை மனிதகுலம் உணர்ந்திட

உழவரின் உழைப்பை உலகம் போற்றிட

ஊழல் மறைந்து உழைப்பு பெருகிட

கையூட்டு பெறுபவர் கைகள் நடுங்கிட

சண்டைகள் குறைந்து சமாதானம் நிலவிட

சாதிகள் அழிந்து சழக்குகள் மறைந்திட

தமிழனின் பெருமை தரணி அறிந்திட

மனிதநேயம் மனிதர் மனங்களில் நிறைந்திட

மனிதனை மனிதன் மனிதனாய் மதித்திட

மனிதா தமிழா ரௌத்திரம் பழகிடு!

பாரதி

இவர் பார்போற்றும் ரதி, பாரதத்தின் அதிபதி

இந்திய விடுதலைப் போரின் தேர்ச்சாரதி

இவர் பிறந்த தமிழகமோ சிறந்த பதி

நாம் இவரை இழந்தது விதியின் சதி!

பாரதி இன்றிருந்தால்

 

என்னருமை பாரதமே உன்பெருமை பார்புகழ உச்சி குளிர்ந்திடுவான்

பெண்கள் சாதனை கண்டு பெருமகிழ்வில் திளைத்திடுவான்

அண்டம் ஆயும் அறிவியல்கண்டு அகம் மகிழ்ந்திடுவான் 

மறுகணமே,

அரசியல் வீழ்ச்சி, அறவியல் அழிவு, மனிதம் மடிதல் , மாதரை வன்கொடுமை செய்தல்

இவற்றை எல்லாம் கண்டு எரிதழல் கொண்டுவா என எரிமலையாய் வெடித்திடுவான்

காகிதத்தை ஆயுதமாக்கி கவி புனைந்து எழுச்சிக்கு வித்திடுவான்

கால வெள்ளத்தால் அழியாத கவி புனைந்து காலம் கடந்தும் வாழ்ந்திடுவான்!

அழகு

அழகை இரசிப்பவரைவிட

அன்பை யாசிப்பவரை

நேசித்துப் பாருங்கள்

வாழ்க்கை அழகாகும்!